

இஸ்ரேலில் அரசுமுறை சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமருக்கு கேரளாவிலிருந்து எடுத்துச் சென்ற 2 பரிசுகளை வழங்கினார்.
3 நாள் பயணமாக டெல் அவிவ் சென்றடைந்த மோடியை அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, விமான நிலையத்துக்கே நேரில் சென்று வரவேற்றார்.
அதைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி, கேரளாவிலிருந்து கொண்டுசென்ற இரு நினைவுப் பரிசுகளை நெதன்யாகுவுக்கு வழங்கினார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலக ட்விட்டர் பக்கத்தில், “கேரளாவில் நீண்ட காலத்துக்கு முன்பே யூதர்கள் வசித்ததை பிரதிபலிக்கும் இரு செப்பு தகடுகளின் பிரதிகளை இஸ்ரேல் பிரதமருக்கு நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது. இவை 9 மற்றும் 10-ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டவை ஆகும்.
இதில் முதல் செப்பு தகடை, யூதர்களின் தலைவரான ஜோசப் ராபனுக்கு, அப்போது ஆட்சியில் இருந்த இந்து அரசர் சேரமான் பெருமாள் வழங்கி உள்ளார். இரண்டாவது தகடு, இந்தியாவில் யூதர்கள் வர்த்தகம் செய்தது குறித்து விளக்குகிறது.
முதலாவது தகடு கொச்சியில் உள்ள பரதேசி சினகோக் வழிபாட்டுத்தலத்தின் ஒத்துழைப்புடனும் இரண்டாவது தகடு திருவல்லாவில் உள்ள மலங்கரா மார் தோம சிரியன் தேவாலயத்தின் ஒத்துழைப்பிலும் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என கூறப் படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.