Last Updated : 15 Jul, 2017 08:20 AM

 

Published : 15 Jul 2017 08:20 AM
Last Updated : 15 Jul 2017 08:20 AM

அரசின் மீதான மக்கள் நம்பிக்கை: இந்தியா 3-வது இடம்

அரசின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை அடிப்படையில் உலகின் முக்கிய நாடுகள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு 3-வது இடம் கிடைத்துள்ளது. அதேசமயம் கடந்த 2007-ல் அரசு மீது இருந்த நம்பிக்கையைவிட தற்போது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை குறைந்துள்ளது.

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (ஓஇசிடி) கடந்த 1961-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பில் 35-க்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் இந்த அமைப்பின் நடவடிக்கைகளில் நெருக்கமாக பங்கெடுத்து வருகின்றன. பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரை தலைமையிடமாக கொண்ட இந்த அமைப்பு பொருளாதார ஒத்துழைப்பு, வளர்ச்சி, அரசு நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் அவ்வப்போது ஆய்வுகளை நடத்தி முடிவுகளை வெளியிட்டு வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு அந்நாட்டு அரசு மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை அவசியம் என்று கருதும் இந்த அமைப்பு அதன் உறுப்பு நாடுகள் மத்தியில் இதுதொடர்பாக ஆய்வு நடத்தியது.

அரசின் நிலைத்தன்மை, ஆபத்து காலங்களில் அரசு காப்பாற்றும் என்று மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை, பொதுச் சேவைகளைச் சிறப்பாக மக்களுக்கு வழங்குதல் உள்ளிட்ட 200 அம்சங்களின் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் இந்தோனேஷியா மற்றும் சுவிட்சர்லாந்து அரசுகள் 80 சதவீத மக்களின் நம்பிக்கையைப் பெற்று முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பிடித்துள்ளன. அடுத்தபடியாக, மத்தியில் உள்ள நரேந்திர மோடி தலைமையிலான அரசு 73 சதவீத நம்பிக்கையைப் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.

கனடா 62 சதவீத நம்பிக்கையைப் பெற்றுள்ளது. ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறி பொருளாதார பிரச்சினைகளைச் சந்தித்துள்ள பிரிட்டன் 40 சதவீத மக்களின் நம்பிக்கையை மட்டுமே பெற்றுள்ளது. மக்கள் வெளியேற்றம், நிதி நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகளைச் சந்தித்த கிரீஸ் இப்பட்டியலில் 12 சதவீத மக்கள் நம்பிக்கையை மட்டுமே பெற்று கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.

அரசின் திட்டங்களை மக்கள் ஏற்றுக் கொண்டு ஒத்துழைப்பு அளித்தல், அதற்காக சிறிய அளவில் தியாகம் செய்தல் உள்ளிட்டவையும் இந்த ஆய்வில் அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்தியாவில் பணமதிப்பு நீக்க நடவடிக்கை, வரிச் சீர்திருத்தங்கள் உள்ளிட்டவற்றை மக்கள் ஏற்றுக் கொண்டதன் விளைவே இந்தியா மூன்றாம் இடத்தைப் பிடித் துள்ளதற்கு காரணம் என்று கருதப்படு கிறது. அதேசமயம், கடந்த 2007-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் சராசரியாக அரசுகள் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை அளவு 45 சதவீத மாகும். அந்த சராசரி அளவு தற்போது 42 சதவீதமாக குறைந் துள்ளது. இதற்கு வெவ்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமின்மை, உள் நாட்டு குழப்பம், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படு கின்றன. இந்தியாவைப் பொறுத்தமட்டில், கடந்த 2007-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது அரசு மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை 82 சதவீதத்தில் இருந்து 73 சதவீதமாக குறைந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x