

அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் போட்டியிட்ட நாள் முதலே அவர் தொடர்பான சர்ச்சை மிகுந்த கருத்துகள் அமெரிக்க ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இதன் காரணமாக ஊடகங்களை ட்ரம்ப் கடுமையாக விமர்சித்து வந்தார். அதிலும் குறிப்பாக சிஎன்என் செய்தி நிறுவனம் பொய் செய்தியை வெளியிட்டுவருவதாக ட்ரம்ப் பகிரங்கமாக குற்றம் சுமத்தி வந்தார்.
இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை சிஎன்என் செய்தி நிறுவனத்தின் மீது புதிய தாக்குதலை ட்ரம்ப் தொடுத்து இருக்கிறார்.
புகழ்பெற்ற டபிள்யு டபிள்யு எஃப் மல்யுத்த நிகழ்ச்சியில் பத்து வருடங்களுக்கு முன் ட்ரம்ப் சிறப்பு விருந்தினராக சில காலம் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட சக சிறப்பு விருந்தினரை ட்ரம்ப் தாக்கும் காட்சி பிரபலமானது. இந்த வீடியோவைத்தான் தற்போது ட்ரம்ப் சிஎன்என் செய்தி நிறுவனத்தைத் தாக்க பயன்படுத்தியுள்ளார்.
அந்த சிறப்பு விருந்தினரின் தலைக்கு பதிலாக சிஎன்என் நிறுவனத்தின் லோகோவை பொருத்தி அதன் மீது தாக்குதல் நடத்துவது போல் உள்ள வீடியோவை ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் #FraudNewsCNN என்ற ஹேஷ்டேக்குடன் பகிர்ந்துள்ளார். ட்ரம்ப்பின் இந்த பதிவுக்கு பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
சுமார் 28 நொடிகள் கொண்ட இந்த வீடியோ 267,081 பேரால் ரீட்விட் செய்யப்பட்டுள்ளது. (இந்த செய்தியை பதிவிட்டபோது)
மேலும் "சமூக ஊடகத்தை நான் அமெரிக்க ஜனாதிபதியாக அல்ல, நவீன யுகத்துக்கு ஏற்ற ஜனாதிபதியாகவே பயன்படுத்தி வருகிறேன்.. அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக்குவேன்" என்று ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.