

பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று இஸ்ரேல் சென்றார். அந்த நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, மூத்த அமைச்சர்கள் விமான நிலையத்துக்கு நேரில் வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்தியா, இஸ்ரேல் இடையே கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தூதரக உறவு நீடிக்கிறது. ஆனால் பாலஸ்தீன பிரச்சினை காரணமாக இந்திய பிரதமர்கள் யாரும் இஸ்ரேல் சென்றது இல்லை. முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டுக்கு நேற்று அரசு முறை பயணமாக சென்றார்.
டெல் அவிவ் நகரில் இருந்து 19 கி.மீ. தொலைவில் உள்ள பென் குரியன் விமான நிலையத் தில் மோடி தரையிறங்கினார். அந்த நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் மூத்த அமைச்சர்கள் விமான நிலையத் துக்கு நேரில் வந்து அவரை வரவேற்றனர். கடந்த மே மாதம் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இஸ்ரேல் சென்றார். அப்போது அவருக்கு வழங்கப்பட்ட அதே உற்சாக வரவேற்பு மோடிக்கும் அளிக்கப்பட்டது.
இந்தியாவை நேசிக்கிறோம்
விமானத்தில் இருந்து இறங்கிய பிரதமர் மோடியை, பெஞ்சமின் நெதன்யாகு ஆரத் தழுவி வரவேற் றார். அப்போது நெதன்யாகு கூறியபோது, “கடந்த 70 ஆண்டுகளாக இந்திய பிரதமரின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தோம். நீங்கள் (மோடி) இப்போது இஸ்ரேலில் கால் பதித்து வரலாறு படைத்துள்ளீர்கள். உங்களை இருகரம் நீட்டி வரவேற்கிறோம். இந்தியாவையும் அதன் கலாச்சாரம், வரலாறு, ஜனநாயகத்தையும் நாங்கள் மிகவும் நேசிக்கிறோம்” என்று தெரிவித்தார்.
இதற்கு நன்றி தெரிவித்துக் கொண்ட பிரதமர் மோடி, இஸ்ரே லுடனான உறவை வலுப்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது என்றார்.
விமான நிலையத்தில் இருந்து பெய்ட் டாகன் என்ற இடத்தில் சுமார் 80 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள பூந்தோட்ட பண்ணைக்கு இரு பிரதமர்களும் சென்றனர். அங்கு இஸ்ரேலின் மலர் சாகுபடி தொழில்நுட்பத்தை பிரதமர் மோடி கேட்டறிந்தார். பின்னர் ஜெருசலேம் நகரில் உள்ள கிங் டேவிட் ஹோட்டலுக்கு மோடி சென்றார்.
சிறிதுநேர ஓய்வுக்குப் பிறகு, நாஜி ஆட்சிக் காலத்தில் கொல்லப் பட்ட யூதர்களுக்காக மேற்கு ஜெருசலேமில் கட்டப்பட்டுள்ள நினைவிடத்துக்கு சென்றார். அவருடன் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் சென்றார். அங்கு இருவரும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் ஜெருசலேமில் உள்ள பிரதமர் பெஞ்சமின் நெதன் யாகுவின் இல்லத்தில் அளிக்கப் பட்ட இரவு விருந்தில் மோடி பங்கேற்றார். அப்போது இரு தலைவர்களும் பல்வேறு விவ காரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
7 ஒப்பந்தங்கள்
இதைத் தொடர்ந்து இஸ்ரேல் அதிபர் ரியூவென் ருவிலியனை பிரதமர் மோடி இன்று சந்தித்துப் பேசுகிறார். பின்னர் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அதிகாரபூர்வமாக சந்திக்கிறார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு, தீவிரவாத ஒழிப்பு, வேளாண் தொழில்நுட்பம், நீர் மேலாண்மை, விண்வெளி ஆராய்ச்சி தொடர்பாக 7 ஒப்பந் தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் இருவரும் செய்தியாளர் களுக்கு கூட்டாக பேட்டியளிக் கின்றனர்.
கடந்த 2008-ம் ஆண்டில் மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலில் யூத தம்பதியினர் கொல்லப்பட்டனர். அவர்களின் மகன் மோஷி ஹால்ட்பெர்க் (10) இஸ்ரேலில் வசிக்கிறார். அந்த சிறுவனை பிரதமர் மோடி இன்று சந்திக்கிறார். இந்தச் சந்திப்பில் மோஷியை காப்பாற்றிய இந்திய பெண் சாண்ட்ராவும் பங்கேற் கிறார்.
இந்திய வீரர்களுக்கு அஞ்சலி
முதலாம் உலகப்போரின்போது உயிரிழந்த இந்திய வீரர்களின் கல்லறை ஹைபா நகரில் உள்ளது. அங்கு நாளை செல்லும் பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் டெல் அவிவ் செல்லும் அவர் இஸ்ரேல் நிறுவனங்களின் புதுமையான கண்டுபிடிப்புகளைப் பார்வையிடுகிறார்.
அன்று மாலை தனது பயணத்தை முடித்துக் கொண்டு ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பங்கேற்க புறப்படுகிறார்.