

இரும்புப் பெண்மணி என்று பிரிட்டிஷ் பிரதமர் மார்கரெட் தாட்சரைச் சொல்வார்கள். ஆனால் அவருக்கு முன்பு இந்தப் பட்டத்தைப் பெற்றிருந்தவர் கோல்டா மேயர். இஸ்ரேலின் பிரதமராக 1969லிருந்து சுமார் பத்து வருடங்கள் ஆட்சி செய்தார்.
ஆட்சியின்போது பலவிதங்களில் தன் மன உறுதியை வெளிக்காட்டியவர் கோல்டா மேயர். அவ்வப்போது அது மனிதாபிமானம் கலக்காத மன உறுதியாகவும் இருந்தது!
போலந்து நாட்டிலுள்ள யூதர்கள் இஸ்ரேலுக்கு அதிக அளவில் வரத் தொடங்கிய நேரம் அது. அப்போது கோல்டா மேயர் போலந்து அரசுக்கு அனுப்பிய கடிதம் இது. ‘‘யூதர்கள் வரட்டும். ஆனால் நோய்வாய்ப்பட்ட, மற்றும் உடல் ஊனமுற்ற யூதர்களை இனியும் நாங்கள் ஏற்கத் தயாராக இல்லை. இதை அவர்கள் மனம் புண்படாமல் விளக்க முடியுமா என்று பாருங்கள்’’.
இஸ்ரேலுக்கு சுதந்திரம் 1948-ல் கிடைத்தபோது கோல்டா மேயர் அந்த நாட்டின் சோவியத் யூனியனுக்கான தூதராக நியமிக்கப்பட்டிருந்தார். பிறகு தொழிலாளர் அமைச்சர், வெளியுறவு அமைச்சர் என்று பல பதவிகளை வகித்தபின் 1969-ல் பிரதமரானார். ஆனால் பாதுகாப்பு அமைச்சர் மோஷே தயானுடன் அவருக்குப் பல கருத்து வேறுபாடுகள் உருவாகித் தொடர்ந்தன. யோம் கிப்பூர் போர் வரை எப்படியோ இருவருமே ஒருவரை ஒருவர் பொறுத்துக் கொண்டனர். பிறகு ஒரு கட்டத்தில் திடீரெனத் தன் பதவியை ராஜினாமா செய்தார் கோல்டா மேயர். 1973-ல் அவரது கட்சிதான் வென்றது. ஆனால் போதிய மெஜாரிட்டி கிடைக்காததால் கூட்டணி அரசை அமைத்தார். எனினும் அதற்கு அடுத்த ஆண்டே ராஜினாமா செய்தார். அது மட்டுமல்ல, அரசியலிலிருந்தே விலகிவிட்டார். அதற்கான காரணம் என்ன என்பது இன்றுவரை புரியாத புதிர்தான்.
இதைத் தொடர்ந்து இஸ்ரேல் அதிபரானார் ராபின். அதே சமயம் பாலஸ்தீனில் பெரும் அச்சுறுத்தல் ஒன்று புதிய இயக்கம் ஒன்றின் மூலம் தோன்றியது. அது பாலஸ்தீன விடுதலை இயக்கம். தனது நாற்பதாவது வயதில் அந்த இயக்கத்தை நிறுவியிருந்தவர் பாலஸ்தீனத்தின் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்தவர்.
‘‘என் ஒரு கையில் ஆலிவ் கிளை உள்ளது. மறு கையில் துப்பாக்கி உள்ளது’’ என்று ஐ.நா.சபையில் 1974ல் பேசி அதிர்ச்சியைக் கிளப்பியவர் யாசர் அராபத். அவர்தான் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை நிறுவியவர். வன்முறை, அமைதிவழி இரண்டுக்கும் அவரை உதாரணமாகக் காட்டுபவர்கள் உண்டு.
யாசர் அராபத் எகிப்து தலைநகரமான கெய்ரோவிலும் ஜெருசலேமிலும் வளர்ந்தவர். 1948 இஸ்ரேல்-அரபு நாடுகள் போரில் பங்கேற்றவர்.
முகமது அப்த் அல் ரஃபல் குத்வா அல் உசயின் மொகம்மது யாசர் அப்தெல் ரஹ்மான் அப்தெல் ராஃப் அராபத் அல் குத்வா அல் ஹுசேனி. இதுதான் யாசர் அராபத்தின் முழுப் பெயர். (‘‘என் முழுப் பெயரையும் மூன்று முறை தடுமாறால் எந்த யூதராவது சொன்னால் ஜெருசலேம் யூதர்களுக்கு. இல்லையேல் அது பாலஸ்தீனர்களான எங்களுக்கு’’ என்று அவர் சவால் விட்டிருக்கலாமோ!)
யாசர் அராபத் பிறந்தது கெய்ரோவில் (எகிப்தின் தலைநகர்). அவர் அம்மா இறந்தவுடன், மாமா வீட்டுக்குப் பயணமானார். அந்த மாமா வசித்தது ஜெருசலேத்தில். நான்கு வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் தன் தந்தை வசித்த கெய்ரோவுக்குத் திரும்பி வந்தார். ஏனோ தன் அப்பாவுடன் யாசர் அராபத்துக்கு ஒட்டுதல் இல்லாமல் இருந்தது. (தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கூட பிறகு அவர் கலந்து கொள்ளவில்லை).
இள வயதிலிருந்தே பாலஸ் தீனம் முழுமையும் அரபுகளுக் குதான் என்பதில் தீவிரமாக இருந்தவர் யாசர் அராபத். பாலஸ்தீனப் பகுதிக்கு ஆயுதக் கடத்தலைச் செய்தார். இந்த ஆயுதங்கள் யூதர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டன. ஃபாட் பல்கலைக்கழகத்தில் (இப்போதைய கெய்ரோ பல் கலைக்கழகம்) படித்துக் கொண் டிருந்த அவர் யூதர்களுக்கெதிராகப் போரிடுவதற்காகவே தன் கல்வியைப் பாதியில் துண்டித்துக் கொண்டார். 1948 அரபு-இஸ்ரேல் போரில் பங்கு கொண்டார்.
அப்படியும் இஸ்ரேல் தனி நாடாக ஆனதில் அவருக்குக் கடும் அதிர்ச்சி உண்டானது. போதாக்குறைக்கு முன்னிலும் அதிகப் பரப்பை வேறு அது வளைத் துக் கொண்டது! கொதித்துப் போன யாசரும் அவரது சில நண்பர்களுமாக இணைந்து அல்-ஃபடா என்ற அமைப்பை நிறுவினார்கள். இஸ்ரேலுக்கெதி ராகச் செயல்படுவJதான் இதன் ஒரே நோக்கம். ஆயுதக் கடத்தல் போன்ற அண்டர் கிரவுண்ட் வேலைகளில் இந்த அமைப்பு முனைப்போடு ஈடுபட்டது.
நாளடைவில் அரசியல் முகம் கிடைத்தால்தான் உலக அரங்கில் தனக்குப் பிரதிநிதித்துவம் கிடைக்கும், இஸ்ரேலுக்கெதிராக மேலும் செயல்பட முடியும் என்ற முடிவுக்கு வந்தார் யாசர் அராபத். பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை 1964-ல் நிறுவினார். பாலஸ்தீன விடுதலை இயக்கம் வெளிப்படையான அரசியல் அமைப்பாகவே தன்னை அறிவித்துக்கொண்டது. வேறு பல குழுக்களும் அதில் இணைந்து கொண்டன.
அந்த சமயத்தில்தான் ஆறு நாள் போர் நடைபெற்றது. இந்தக் காலகட்டத்தில் யாசர் அராபத் தனது இயக்கத்தின் செயல் குழுவின் தலைவராக 1969-ல் தேர்வு செய்யப்பட்டார்.
இயக்கத்தை வளர்ப்பதில் தன் முழு சக்தியையும் செலவழித்தார் யாசர் அராபத். ஜோர்டானிலிருந்து இவர் வெடிகுண்டு தயார் செய்வதிலிருந்து பலவித வன்முறைச் செயல்களைத் திட்டமிட, ஒரு கட்டத்தில் ஜோர்டான் மன்னர் உசேன் இவரைத் தன் நாட்டைவிட்டு வெளியேற்றினார்.
சின்ன நாடான இஸ்ரேல் அரபு நாடுகளை வென்றது குறித்து பிரமிக்கும் உலக நாடுகளை உலுக்க வேண்டும். பாலஸ்தீனர்கள் நினைத்தால் எந்த எல்லைக்குச் செல்வார்கள் என்பதை உணர்ந்து அவர்களுக்கான நியாயத்தை வழங்க உலக நாடுகள் முன்வர வேண்டும். என்ன செய்யலாம்? யாசர் அராபத் ‘தீவிரமாக’ யோசித்தார்.
அப்போது உலக நாடுகளெல்லாம் பங்குபெறும் ஒரு நிகழ்ச்சி நெருங்கிக் கொண்டிருந்தது. அதைத் தனது அடுத்த களமாகத் தேர்ந்தெடுத்தார் யாசர் அராபத்.
அந்த நிகழ்ச்சி உலக நாடுகளின் நட்பு மற்றும் சமாதானத்துக்கான முயற்சியாகக் கருதப்படும் ஒலிம்பிக்ஸ்!
(இன்னும் வரும்..)