Published : 19 Nov 2014 10:30 AM
Last Updated : 19 Nov 2014 10:30 AM

யூத வழிபாட்டுத்தலம் மீது தாக்குதல்: இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே மீண்டும் போர் பதற்றம்

இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் உள்ள யூத வழிபாட்டுத் தலத்தில் 2 பாலஸ்தீன இளைஞர்கள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் அங்கு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த 4 பேர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவத்தால் இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே மீண்டும் போர் பதற்றம் வெடித்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இஸ்ரேல் படை வீரர்கள் 3 பேரை பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்தினர் கடத்திச் சென்று கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக இருதரப்புக்கும் இடையே போர் வெடித்து காஸா பகுதியைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

இந்நிலையில் கிழக்கு ஜெரு சலேம் பகுதியில் உள்ள யூத வழிபாட்டுத் தலத்துக்குள் நேற்று 2 பாலஸ்தீனர்கள் நுழைந்தனர். அங்கு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த இஸ்ரேலியர்களை அவர்கள் கத்தி, கோடரியால் சரமாரியாக வெட்டினர்.

இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர், 2 பாலஸ்தீனர்களையும் சுட்டு வீழ்த்தினர். ஹமாஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்களே இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே மீண்டும் போர் பதற்றம் உருவாகியுள்ளது.

இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறிய போது, படுகொலைக்கு காரணமானவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

இருதரப்பினரும் ஜெருச லேமை புனித நகரமாக கருதுகின்றனர். ஜெருசலேமில் பாலஸ் தீனர்கள் மட்டுமே பிரார்த்தனை நடத்த வேண்டும், மற்ற வழிபாட்டுத் தலங்கள் இருக்கக்கூடாது என்று ஹமாஸ் இயக்கம் வலியுறுத்தி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x