

26/11 மும்பை தீவிரவாதத் தாக்குதலில் பெற்றோரை இழந்த மோஷியை, இஸ்ரேல் பயணத்தில் பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 4 முதல் மூன்று நாள் பயணமாக இஸ்ரேல் செல்கிறார். இதன்மூலம் இஸ்ரேல் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் என்ற சிறப்பை மோடி பெறுகிறார்.
இந்த நிலையில் இஸ்ரேல் வரும் மோடி அங்கு மும்பை தாக்குதலில் தனது பெற்றோரை இழந்த மோஷியை மோடி சந்திக்க உள்ளார்.
இதுகுறித்து மோஷியின் தாத்தா ரப்பி ஷிமான் கூறும்போது. "இந்திய பிரதமர் எங்களை காண விரும்புவதாக இந்திய தூதர்களிடமிருந்து எனக்கு தொலைபேசி வந்ததை என்னால் இதுவரை நம்ப முடியவில்லை. இந்த உணர்வை என்னால் வார்த்தைகளால் கூற முடியாது. இந்தியப் பிரதமரை காண ஆவலோடு இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
மும்பை தீவிரவாதத் தாக்குதலில் பணிப்பெண்ணால் தப்பித்த மோஷி
கடந்த 2008 நவம்பர் 26-ம் தேதி பாகிஸ்தானில் இருந்து கடல் வழியாக மும்பைக்குள் ஊடுருவிய 11 தீவிரவாதிகள், சத்ரபதி சிவாஜி ரயில் முனையம், தாஜ்மஹால் நட்சத்திர ஓட்டல், நாரிமன் ஹவுஸ் உள்ளிட்ட 8 இடங்களில் தாக்குதல் நடத்தினர். இதில் வெளிநாட்டினர் உட்பட 154 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.