Published : 27 Mar 2014 10:45 AM
Last Updated : 27 Mar 2014 10:45 AM

கடலில் மிதக்கும் விமானத்தின் 122 பொருள்கள்: மலேசிய அமைச்சர்; விமானத்தைத் தேடும் பணி மீண்டும் தொடங்கியது

மலேசிய விமானத்தின் பாகங்கள் என சந்தேகிக்கப்படும் 122 பொருள்கள் தெற்கு இந்திய பெருங்கடலில் மிதந்து வருவதாகவும், அப்பகுதியில் தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் மலேசிய அமைச்சர் ஹிஷாமுதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து சீனாவின் பெய்ஜிங் நோக்கி கடந்த மார்ச் 8-ம் தேதி புறப்பட்ட எம்.எச். 370 விமானம், ரேடாரின் கண் காணிப்பிலிருந்து மறைந்து திடீரென மாயமானது. அந்த விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகி இருக் கும் என கருதப்படுகிறது. அங்கு நடைபெற்று வந்த தேடுதல் பணிகள், மோசமான வானிலை காரணமாக கடந்த செவ் வாய்க்கிழமை நிறுத்திவைக்கப்பட்டது.

புதன்கிழமை காலை வானிலையில் முன்னேற்றம் காணப்பட்டதைத் தொடர்ந்து, தேடுதல் பணி மீண்டும் தொடங்கியது. ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, அமெரிக்கா, ஜப்பான், சீனா, தென் கொரியா ஆகிய நாடு கள் தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

மலேசிய அமைச்சர் பேட்டி

இந்நிலையில், மலேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹிஷாமுதீன் ஹுசைன் கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: “பிரான்ஸின் செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட படங்களை ஆய்வு செய்ததில் தெற்கு இந்திய பெருங்கடலில் விமானத்தின் 122 பொருள்கள் மிதப்பது தெரியவந்துள்ளது. பெர்த்தில் இருந்து 2,557 கி.மீ. தூரத்தில் கடல் பகுதியில் மிதந்து வரும் அந்த பொருள்களின் அளவு ஒரு மீட்டர் நீளம் முதல் 23 மீட்டர் நீளம் வரை உள்ளதாகத் தெரிகிறது. தேடுதல் பணியை முன்னின்று நடத்தி வரும் ஆஸ்திரேலியாவுக்கு இந்த புகைப்படங்களை அனுப்பிவைத்துள்ளோம்.

எனினும், அந்த பொருள்கள் எம்.எச். 370 விமானத்தின் பாகங்களா என்பதை இப்போதைக்கு உறுதி செய்ய முடியாத நிலையில் இருக்கிறோம். பிரான்ஸைப் போன்று ஆஸ்திரேலியாவும், சீனாவும் செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட படங்களை அனுப்பிவைத்துள்ளது. அவை அனைத்தும் விமானம் விழுந்து கிடக்கும் இடத்தை அறிய உதவி கரமாக இருக்கும் என நம்புகிறோம்” என்றார்.

ஆஸ்திரேலிய பிரதமர் இரங்கல்

இதற்கிடையே, ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் புதன்கிழமை பேசியதாவது: “இப்போது வரை கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப் படையில் எம்.எச். 370 விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விபத்துக்குள்ளாகிவிட்டது என்றும், அதில் பயணம் செய்த 239 பேரும் உயிரிழந்துவிட்டனர் என்றும் மலேசிய அரசு அறிவித்துள்ளது.

விமானம் கடைசியாக பறந்ததாக கருதப்படும் பகுதியில், அதன் சிதைந்த பாகங்கள் சில மிதந்து கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. சிதைந்த விமானத்தில் அனைத்து பாகங் களையும் மீட்க முடியாமல் போனால் கூட, ஒரு சில பாகங்களையாவது மீட்க முடியும் என்ற நம்பிக்கையுள்ளது.

தேடுதல் பணியில் 12 விமானங் களும், 2 கப்பல்களும் ஈடுபட்டுள்ளன. விமானத்தில் பைலட்டுகளின் உரையாடல்கள் பதிவாகியிருக்கும் கறுப்புப் பெட்டியை தேடுவதற்கான கருவி ஆஸ்திரேலிய கப்பல் மூலம் விபத்து நிகழ்ந்த இடத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

விபத்து நிகழ்ந்த பகுதி ஆஸ்திரே லியாவுக்கு அருகில் உள்ள பகுதி என்பதை கருத்தில் கொண்டு, மோசமான வானிலையையும் பொருட்படுத்தாது மீட்புப் பணியில் தொடர்ந்து ஈடுபடப்போவதாக மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு உறுதியளித்துள்ளேன்” என்றார். பின்னர், விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரங்கல் தீர்மானத்தை பிரதமர் டோனி அபோட் கொண்டு வந்தார்.

அவர் கூறுகையில், “உயிரிழந்த 239 பேரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக இறந்துவிட்டதாக கருதப்படும் 6 ஆஸ்திரேலியர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லி, அவர்களின் இதயத்தில் ஏற்பட்டுள்ள வலியை நீக்க நம்மிடம் வார்த்தைகளே இல்லை. அன்புக்குரியவர்களை இழந்து வாடும், அந்த குடும்பத்தினரின் துக்கத்தில் நாங்களும் பங்கெடுத்துக் கொள்கிறோம்.” என்றார்.

கடைசியாக விமானத்திலிருந்து வந்த சிக்னலை பிரிட்டனின் இம்மர்ஸாட் செயற்கைக்கோள் நிறுவனம் பதிவு செய்துள்ளது. அதை ஆய்வு செய்ததில், தெற்கு இந்திய பெருங்கடலில் விமானம் நொறுங்கி விழுந்திருக்கும் என்று கருதப்படுகிறது. இதைத் தொடர்ந்து விமானம் விபத்துக்குள்ளாகி, அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்துவிட்டதாக மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் கடந்த திங்கள்கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்தார் என் பது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x