Published : 12 Sep 2016 10:43 AM
Last Updated : 12 Sep 2016 10:43 AM

2-ம் உலகப் போர் முடிந்த மகிழ்ச்சியில் அமெரிக்க ராணுவ வீரர் கொடுத்த முத்தத்தால் பிரபலமான நர்ஸ் 92 வயதில் மரணம்

இரண்டாம் உலகப் போர் முடிந்த மகிழ்ச்சியில், ராணுவ வீரர் கொடுத்த முத்தத்தால் உலகளவில் பிரபலமான நர்ஸ், தனது 92-வது வயதில் காலமானார்.

போலந்து நாட்டை கைப்பற்ற ஜெர்மனி போர் தொடுத்தது. அப் போது உருவானதுதான் 2-ம் உலகப் போர். ஜெர்மனிக்கு ஆதரவாக இத்தாலி, ஜப்பான் நாடுகள் களம் இறங்கின. ஜெர்மனியை எதிர்த்து வலிமைமிக்க இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையாகப் போரிட்டன. இந்தப் போர் 6 ஆண்டுகள் நீடித்தது. கடைசி யில் அணுகுண்டு தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவிடம் ஜப்பான் சரணடைந்தது. அந்த வரலாற்று சம்பவம் கடந்த 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி நடந்தது.

அப்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ‘டைம்ஸ்’ சதுக்கத்தில் ஆயிரக்கணக் கானோர் கூடி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அங்கு வந்த ராணுவ வீரர் ஒருவர், உற்சாக மிகுதியில் நர்ஸ் சீருடையில் இருந்த இளம் பெண்ணை திடீரென கட்டி யணைத்து முத்தம் கொடுத்தார்.

அந்தக் காட்சியை அங்கிருந்த பிரபல புகைப்படக் கலைஞர் ஆல்பிரட் எய்சென்ஸ்டாட் என்பவர் கண்ணிமைக்கும் நேரத்தில் படம் எடுத்துவிட்டார். ‘அமெரிக்காவின் வெற்றி கொண்டாட்டம்’ என்ற தலைப்பில் அந்தப் புகைப்படம் பத்திரிகையில் வெளியானது. அந்த கறுப்பு வெள்ளை படம் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானது. ஆனால், புகைப்படத்தில் இருந்த இருவரும் யார் என்று தெரியவில்லை.

ஆனால், அந்தப் புகைப்படத்தில் இருப்பது நாங்கள்தான் என்று பலர் கூறினர். தீவிர விசாரணையில் அவர்கள் பொய் சொன்னது அம்பலமானது. கடந்த 1945-ம் ஆண்டுக்குப் பிறகு அவர்கள் யார் என்றே தெரியாமல் இருந்தது.

‘தி கிஸ்ஸிங் செய்லர்’ என்ற தலைப்பில் ஜார்ஜ் கல்டோரிசி மற்றும் லாரன்ஸ் வெரியா ஆகியோர் கடந்த 2012-ம் ஆண்டு புத்தகம் வெளியிட்டனர். அதில்தான் சம்பந்தப்பட்ட வீரர் ஜார்ஜ் மென்டோசா என்பதும் அந்த இளம் நர்ஸ் கிரேட்டா பிரைட்மேன் என்பதும் ஆதாரங்களுடன் உறுதி செய்யப்பட்டது. இருவரும் வேறு வேறு நபர்களை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தனர்.

இந்நிலையில், உலகம் முழுவதும் பிரபலமான நர்ஸ் கிரேட்டா, நிமோனியா காய்ச்சலால் வெர்ஜினியாவில் உள்ள தனது இல்லத்தில் நேற்றுமுன்தினம் காலமானார். அவருக்கு வயது 92. இத்தகவலை கிரேட்டாவின் மகன் ஜோஷுவா பிரைட்மேன் உறுதிப்படுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x