

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பனாமா பேப்பர்ஸ் ஊழல் விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் நியமித்த கூட்டு விசாரணைக் குழுவின் முன்பு வியாழக்கிழமை ஆஜரானார்.
பதவியில் இருக்கும் ஒரு பாகிஸ்தான் பிரதமர் பெரிய அளவிலான ஊழல் விவகாரத்தில் உயர் நிலை விசாரணைக் குழுவின் முன்பு ஆஜராவது இதுவே முதல் முறையாகும்.
மத்திய புலனாய்வு அமைப்பு (எப்ஐஏ), உளவு அமைப்பு (ஐஎஸ்ஐ), ராணுவ உளவு அமைப்பு உள்ளிட்ட 6 அமைப்புகளின் உயர் அதிகாரிகள் கொண்ட குழுவின் முன்பு ஜூன் 15-ம் தேதி நவாஸ் ஷெரீப் ஆஜராக வேண்டும் என்று விசாரணைக் குழுவின் தலைவர் வாஜித் ஜியா சம்மன் அனுப்பியிருந்தார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பிய ஷெரீப்பிடம் ஜூன் 10-ம் தேதி சம்மன் வழங்கப்பட்டது.
பரபரப்பை கிளப்பிய பனாமா பேப்பர்ஸ்
பனாமா நாட்டின் மொசாக் பொன்சேகா சட்ட நிறுவனத்தின் உதவியுடன், பல்வேறு நாடுகளின் முக்கிய பிரமுகர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் சட்ட விரோதமாக முதலீடு செய்துள்ளனர். இது தொடர்பான ஆவணங்கள், பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபின் பெயரும் இருந்தது. இவர் 1990-களில் பிரதமராக இருந்தபோது லண்டனில் சட்டவிரோதமாக சொத்து வாங்கியதாகவும், சில நிறுவனங்களை அவரது மகன்கள் நிர்வகித்து வருவதாகவும் தகவல் வெளியானது.
இதையடுத்து, நவாஸ் ஷெரீபை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் இம்ரான் கான் உள்ளிட்ட சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு விசாரணை கடந்த பிப்ரவரி 23-ம் தேதி முடிந்து ஏப்ரல் 20-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
அந்தத் தீர்ப்பில், ''பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து நவாஸ் ஷெரீபை அகற்றுவதற்கு போதுமான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. எனினும் இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க கூட்டு விசாரணைக் குழு அமைக்கப்படுகிறது. இக்குழு முன்பு நவாஸ் ஷெரீப், அவரது மகன்கள் ஹசன் மற்றும் ஹுசைன் ஆகியோர் ஆஜராக வேண்டும். இக்குழு 2 மாதத்தில் விசாரணையை முடித்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்'' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.