Last Updated : 04 Nov, 2014 11:13 AM

 

Published : 04 Nov 2014 11:13 AM
Last Updated : 04 Nov 2014 11:13 AM

வாகா தற்கொலைப் படைத் தாக்குதல்: 3 தீவிரவாத அமைப்புகள் பொறுப்பேற்பு பலி எண்ணிக்கை 61 ஆக உயர்வு

பாகிஸ்தானின் வாகா எல்லையில் நேற்று முன்தினம் நடைபெற்ற தற்கொலைப் படைத் தாக்குதல் சம்பவத்துக்கு பொறுப்பேற்பதாக மூன்று தீவிரவாத அமைப்புகள் அறிவித்துள்ளன. இந்த தாக்குதலில் 8 குழந்தைகள், 10 பெண்கள், 3 ராணுவ வீரர்கள் உள்பட 61 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவின் அம்ரிஸ்தர், பாகிஸ்தானின் லாகூர் இடையே அமைந்துள்ள எல்லை நுழை வாயில் பகுதியில் நாள்தோறும் மாலையில் கொடியிறக்கம் மற்றும் அணிவகுப்பு நிகழ்ச்சியை இரு நாடுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்களும் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் பாகிஸ்தான் எல்லையில் உள்ள வாகாவில் கொடியிறக்க நிகழ்ச் சியை பார்த்துவிட்டு வாகன நிறுத்துமிடம் அருகே திரும்பிக் கொண்டிருந்தவர்கள் மீது தற்கொலைப் படைத் தீவிரவாதி தாக்குதல் நடத்தினார். இந்த குண்டுவெடிப்பில் 52 பேர் உயிரி ழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்த 9 பேர் மருத்துவமனையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.

இத்தாக்குதல் தொடர்பாக வாகா மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தேகத்தின் பேரில் 20 பேரை பிடித்து தடுப்புக் காவலில் வைத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சட்டத்துறை அமைச்சர் முஜ்தபா ஷுஜார் ரெஹ்மான் கூறும்போது, “எல்லைப் பகுதியில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதன் காரணமாகவே இத்தாக்குதலை தடுக்க இயலாமல் போனது. பல அடுக்கு பாதுகாப்பை மீறி தீவிரவாதி எப்படி அந்த பகுதிக்கு வந்திருக்க முடியும் என்பது குறித்து புலனாய்வு அதிகாரிகள் விசாரிக்க வேண்டும்” என்றார்.

3 அமைப்புகள் பொறுப்பேற்பு

இந்த தாக்குதலுக்கு பொறுப் பேற்பதாக அல் காய்தாவுடன் தொடர்புடைய பாகிஸ்தான் தலிபானிலிருந்து பிரிந்து சென்ற ஜண்டுல்லா தீவிரவாத அமைப்பு அறிவித்துள்ளது. அதே சமயம், ஜமாத் உல் அஹ்ரார் என்ற அமைப்பும், தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது. தங்கள் அமைப்பைச் சேர்ந்த ஹபிஸ் ஹனிபுல்லா, இத்தாக்குதலை நடத்தியதாக கூறியுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு ட்விட்டர் இணையதளத்தில் கூறியுள்ளதாவது:

பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் எச்சரிக்கை விடுக்கும் விதமாக இத்தாக்குதலை நடத்தியுள்ளோம். எதிர்காலத்தில் எல்லையை கடந்தும் தாக்குதல் நடத்துவோம் என்று தெரிவித்துள்ளது. ஜமாத் உல் அஹ்ரார் அமைப்பும் பாகிஸ்தான் தலிபானிலிருந்து பிரிந்து சென்ற அமைப்புதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே மஹர் மெஹ்சுத் என்ற அமைப்பும், இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. இதனால், தற்கொலைப்படைத் தாக்குதலை நடத்திய அமைப்பு எது என்பதில் குழப்பம் நீடிக்கிறது. இது தொடர்பாக பாதுகாப்புப் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து வாகா அட்டாரி எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் ஒரே சமயத்தில் மேற்கொள்ளும் கொடியிறக்கம் மற்றும் அணிவகுப்பு நிகழ்ச்சியை 3 நாட்கள் ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x