Published : 20 Oct 2013 04:49 PM
Last Updated : 20 Oct 2013 04:49 PM

இஸ்லாமிய ஆட்சியை நிறுவும் வரை ஓயமாட்டோம்: தலிபான் தலைவர்கள் சூளுரை

மேற்கத்திய நாடுகளின் ஆதரவோடு செயல்படும் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அரசுகளை ஆட்சியிலிருந்து அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்தும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று அந்நாடுகளிலிருந்து செயல்படும் தலிபான் தீவிரவாத இயக்கங்களின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானின் 'தி நியூஸ்' பத்திரிகையில், தெஹ்ரிக் இ தலிபான் தலைவர் ஹக்கிமுல்லா மெஹ்சூத், ஆப்கானிஸ்தான் தலிபான் தலைவர் முல்லா உமர் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

ஹக்கிமுல்லா மெஹ்சூத் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மேற்கத்திய நாடுகளை எதிர்க்கும் இஸ்லாமிய இயக்கங்களில் எனது இயக்கமும் அங்கம் வகிக்கிறது. ஒசாமா பின் லேடனை அமெரிக்காவிடம் ஒப்படைக்க மறுத்து, அவர்களை எதிர்த்துப் போராடிய முல்லா உமரின் வழியில் நாங்கள் செயல்படுகிறோம்.

மத்திய ஆசியா பகுயிலிருந்து ஆப்பிரிக்காவின் பாலைவனப் பிரதேசம் வரை இஸ்லாமிய அரசை நிறுவுவதுதான் எங்கள் இயக்கத்தின் நோக்கம். எங்களை எதிர்த்து தந்திரமான பல நடவடிக்கைகளில் அரசு ஈடு பட்டது. அதனால் பலன் ஏதும் ஏற்படா ததால், இப்போது பேச்சுவார்த்தை க்கு இறங்கி வந்துள்ளது. தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் அரசு உள்ளது. பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள எங்களுக்கும் விருப்பம் உள்ளது.

அந்த கூட்டத்தில் எங்களின் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசுவோம். இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் அடிப்படையில் பாகிஸ்தானில் ஆட்சியை அமைப்பதே எங்களின் லட்சியம். பொதுமக்களை குறிவைத்து நாங்கள் தாக்குதல் நடத்தியதில்லை. அதையெல்லாம் அரசுப் படைகளே செய்துவிட்டு, எங்கள் மீது பழிபோடுகின்றன' என்று தெரிவித்துள்ளார்.

முல்லா உமர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 'விரைவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை ஆப்கன் மக்கள் புறக்கணிக்க வேண்டும். பெண்கள், இளைஞர்களுக்கு உரிமைகளை வழங்க வேண்டும் என்ற பெயரில், இஸ்லாமிய நெறிமுறைகளுக்கும் நாட்டின் கலாச்சாரத்துக்கும் மாறாக மேற்கத்திய கலாச்சாரத்தைப் புகுத்தும் வகையில் சில ஊடகங்கள் செயல்படுகின்றன. அவற்றை எச்சரிக்கையோடு அணுக வேண்டும். நாட்டின் மீது போர்த்தொடுத்துள்ளவர்கள் (அமெரிக்கர்கள்) ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு எதிரான புனிதப் போரை இன்னும் பலமாகவும் முழு வேகத்துடனும் நடத்துவோம்' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x