

அமெரிக்கா தனது இரண்டாவது போர்க் கப்பலான யு.எஸ்.எஸ். ரொனால்ட் ரீகன் கொரிய தீபகற்பப் பகுதிக்கு அனுப்பியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் சிஎன்என் செய்தி நிறுவனத்திடன் கூறும்போது, "ஜப்பான் கடலில் பாராமரிப்பு மற்றும் கடலில் சோதனைகளை ஆராய்ந்தபின் யு.எஸ்.எஸ் ரொனால்ட் ரீகன் கொரிய தீபகற்பப் பகுதிக்கு புறப்பட்டது. தீபகற்பப் பகுதிக்கு வந்தவுடன் போர் விமானங்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்வதற்கும், போர்த் திறனை உறுதிப்படுத்தவும் கவனம் செலுத்தப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.
2003-ம் ஆண்டு முதல் செயல்படும் அமெரிக்காவின் போர்க் கப்பலான ரொனால்ட் ரீகன் 8.5 பில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்டது.
1092 அடி உயரம் கொண்ட ரொனால்ட் ரீகன் சுமார் 60 போர் விமானங்களைக் கொண்டிருக்கும் என்று அமெரிக்க கப்பற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரியா 6-வது முறையாக அணுஆயுத சோதனை நடத்த தயாராகி வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அமெரிக்கா, அணுஆயுத சோதனை நடத்தினால் அந்த நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுப்போம் என்று எச்சரிக்கை விடுத்தது.
மேலும், அமெரிக்க கடற்படையின் யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன், நீர் மூழ்கி போர்க்கப்பல் யு.எஸ்.எஸ். மிக்ஸிகன் ஆகியவை தென்கொரியாவில் முகாமிட்டுள்ளன. வடகொரியாவின் ஏவுகணை தாக்குதலைச் சமாளிக்க அமெரிக்காவின் ஹவாய் பகுதியில் ஏவுகணை தடுப்புச் சாதனங்கள் நிறுத்தியது.
இதனால் கொரிய தீபகற்பப் பகுதியில் போர்ச் சூழல் நிலவி வருகிறது, இந்த நிலையில் அமெரிக்காவின் போர் கப்பலான யு.எஸ்.எஸ் ரொனால்ட் ரீகன் கொரிய தீபகற்பப் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.