Last Updated : 11 Aug, 2016 12:53 PM

 

Published : 11 Aug 2016 12:53 PM
Last Updated : 11 Aug 2016 12:53 PM

ஐ.எஸ். நிறுவனர் ஒபாமா; துணை நிறுவனர் ஹிலாரி: விமர்சனத் தாக்குதலைத் தொடரும் டிரம்ப்

அமெரிக்க அதிபர் ஒபாமா ஐ.எஸ். அமைப்பின் நிறுவனர் என விமர்சித்துள்ளார் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளாரான டொனால்டு டிரம்ப்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரச்சாரங்கள் நாளுக்கு நாள் சூடு பிடித்து வருகிறது. அதற்கு முக்கிய காரணமாக இருப்பவர் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப்.

டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தில் எதிரணியினர் குறித்து கூறும் குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றும் அமெரிக்க அரசியல் வரலாற்றில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது என்றால் அது மிகையாகாது.

அந்தவகையில் மற்றுமொரு அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளார் டிரம்ப்.

முன்னதாக புளோரிடாவில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற டொனால்டு டிரம்ப் ஐஎஸ் அமைப்பை நிறுவியவர்களில் ஹிலாரியும் ஒருவர். இதற்காக ஐ.எஸ் அமைப்பு ஹிலாரிக்கு விருது வழங்க வேண்டும் என்று குறிப்பிடிருந்தார்.

இந்நிலையில் மேற்கூறிய கருத்து பற்றிய தனது நிலைப்பாட்டில் மாற்றம் செய்துள்ளார் டிரம்ப்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் குடியரசுக் கட்சியின் தலைமையில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற பேரணியில் பேசிய டிரம்ப் ,“அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாதான் ஐ.எஸ் அமைப்பை நிறுவியவர். ஹிலாரி கிளிண்டன் ஐ.எஸ் அமைப்பின் துணை நிறுவனர் ஆவார். கடந்த திங்கட்கிழமை ஃபுளோரிடாவில் நாடந்த ஹிலாரி கிளிண்டனின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஆர்லாண்டோ துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு காரணமானவரின் தந்தையும் கலந்து கொண்டுள்ளார். அவரும் ஹிலாரியை போன்றவர்தான்.

மேலும் ஓபாமாவால் தான் ஐ.எஸ் அமைப்பு தெற்கு ஆசிய பகுதிகளிலிருந்து மேற்கத்திய நாடுகளுக்கு பரவியது" என்றார்.

அதுமட்டுமில்லாது ஒபாமாவை அவரது முழுப்பெயரான பாரக் ஹுசைன் ஒபாமா என்று குறிப்பிட்டு ஒபாமாவின் அமெரிக்கா மீதான விசுவாசம் குறித்து கேள்வியையும் எழுப்பியுள்ளார் டிரம்ப்.

குடியரசு கட்சியின் இப்பேரணியில் முன்னாள் உறுப்பினரான மார்க் போலே கலந்து கொண்டார். மார்க் போலே 2006 ஆம் ஆண்டு வெள்ளை மாளிகையில் எழுந்த பாலியல் குற்றச்சாட்டு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x