

இந்திய-அமெரிக்கரும் தெற்கு கரோலினா ஆளுநருமான நிக்கி ஹாலே (45) ஐ.நா.வுக்கான அடுத்த அமெரிக்க தூதராக நியமிக்கப்படுவது உறுதியாகி உள்ளது. இதன்மூலம், அமெரிக்காவில் கேபினெட் அந்தஸ்து கொண்ட பதவியை எட்டிப் பிடித்த முதல் இந்தியர் என்ற சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றார். இதையடுத்து, தனது கட்சியைச் சேர்ந்த நிக்கி ஹாலேவை ஐ.நா.வுக்கான தூதராக நியமித்தார் ட்ரம்ப். இந்நிலையில் ட்ரம்ப் கடந்த 20-ம் தேதி முறைப்படி அமெரிக்க அதிபராக பதவியேற்றார்.
இந்நிலையில், நிக்கி ஹாலே வின் நியமனத்துக்கு நாடாளுமன்ற செனட் சபையின் வெளியுறவு விவகாரக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் ஹாலேவுக்கு 96 பேர் ஆதரவும் 4 பேர் எதிர்ப்பும் தெரிவித்தனர். இதையடுத்து, ஹாலே நியமனம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை அறிந்ததும் தெற்கு கரோலினா மாகாண ஆளுநர் பதவியை ஹாலே ராஜினாமா செய்தார். இப்போது ஐ.நா.வுக்கான தூதர் பதவியில் உள்ள சமந்தா பவருக்கு பதில் ஹாலே விரைவில் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேபினெட் அந்தஸ்திலான பதவி கொடுத்துள்ள போதிலும், ட்ரம்பின் கொள்கைகளில் முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாட்டை ஆதரிக்கப் போவதில்லை என நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இந்திய தம்பதிக்குப் பிறந்தவர்தான் நிக்கி ஹாலே. இவர் தெற்கு கரோலினா மாகாண ஆளுநராக 2-வது முறையாக பதவி வகித்து வந்தார். இவர் குடியரசுக் கட்சியின் ‘வளரும் நட்சத்திரம்’ என்று கருதப்படுகிறார்.