Last Updated : 14 Nov, 2014 05:30 PM

 

Published : 14 Nov 2014 05:30 PM
Last Updated : 14 Nov 2014 05:30 PM

இனம்புரியாத துகள்களை உற்பத்தி செய்யும் பால்வெளி மண்டல ராட்சத கருந்துளை

பால்வெளி மண்டலத்தின் மையத்தில் இருக்கும் ராட்சத கருந்துளை (Black hole) இனம்புரியாத அதி-ஆற்றல் நியூட்ரினோக்களை உற்பத்தி செய்து அனுப்புவதாக நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தக் கண்டுபிடிப்பு மேல் ஆராய்ச்சியில் உறுதி செய்யப்பட்டால், நியூட்ரினோக்கள் உற்பத்தியை கருந்துளையக் காரணமாக்கும் முதல் கண்டுபிடிப்பு என்று கூறமுடியும்.

நியூட்ரினோக்கள் என்பது மிகமிகச் சிறிய துகள்கள் ஆகும். இது மின்னூட்டம் இல்லாதது. மேலும் புரோட்டான் மற்றும் எலெக்ட்ரான்களுடன் மிகவும் பலவீனமாக ஊடாடும் துகள்கள் ஆகும்.

மின்னூட்ட துகள்கள் அல்லது ஒளி போன்று அல்லாமல், நியூட்ரினோக்கள் அதன் அண்டவெளியின் அடியாழ ஆதாரங்களிலிருந்தே உருவாகும். மேலும், பிரபஞ்சம் முழுதும் அது பயணிக்கக் கூடியது. இடையில் வரும் எந்த ஒரு பொருளாலும் உறிஞ்சமுடியாது இது பிரபஞ்சம் முழுதும் பிரயாணிக்கும்.

சூரியனிலிருந்து வெளிவரும் நியூட்ரினோக்கள் பூமியை தாக்கி வருகின்றன. இவை ஆற்றல் குறைவான பலவீனமான நியூட்ரினோக்கள். ஆனால் சூரியனுக்கு அப்பால் உள்ள நியூட்ரினோக்கள், இவற்றைவிட மில்லியன் அல்லது பில்லியன் மடங்கு அதிக சக்தி வாய்ந்தது.

அதி-ஆற்றல் நியூட்ரினோக்கள் எங்கிருந்து உற்பத்தியாகின்றன என்பதை விஞ்ஞானிகள் நீண்டகாலமாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

இதற்கான முதல் ஆதாரம் இப்போது கிடைத்துள்ளது, “பால்வெளி மண்டல ராட்சத கருந்துளை இந்த சக்திவாய்ந்த நியூட்ரினோக்களை உற்பத்தி செய்யலாம் என்று தெரிகிறது” என்று மேடிசனில் உள்ள விஸ்கான்சின் பல்கலைக் கழக ஆய்வாளர் யாங் பய் கூறினார்.

தென் துருவத்தில் அமைக்கப்பட்டுள்ள தி ஐஸ்கியூப் நியூட்ரினோ ஆப்சர்வேட்டரி 36 அதி-ஆற்றல் நியூட்ரினோக்களை தடம் கண்டுள்ளது. இந்த ஆப்சர்வேட்டரி 2010ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலமும், மூன்று எக்ஸ்-ரே தொலைநோக்கிகள் மூலமும் அண்ட வெளியில் பயங்கர நிகழ்வுகளை கண்டுபிடிக்க முடிகிறது என்று கூறிய விஞ்ஞானிகள், பூமியை நோக்கி அதி-ஆற்றல் நியூட்ரினோ வருவதுடன் இந்தக் கண்டுபிடிப்புகள் ஒத்துப் போக்கிறது என்கின்றனர்.

சந்திரா-எக்ஸ்-ரே கண்காணிப்பகம் பால்வெளிமண்டலத்தின் ராட்சத கருந்துளையில் ஏற்பட்ட பெருவெடிப்பை அடையாளம் கண்டுள்ளது.

இந்த பெருவெடிப்பு ஏற்பட்ட 3 மணி நேரத்தில் ஐஸ்கியூப் ஆப்சர்வேட்டரி நியூட்ரினோ வெளிப்பாட்டை உறுதி செய்தது என்று விஸ்கான்சின் பல்கலைக் கழகத்தின் ஆண்ட்ரியா பீட்டர்சன் தெரிவித்தார்.

இந்த பெருவெடிப்புக்கு சில நாட்களில் பல நியூட்ரினோக்கள் கருந்துளையிலிருந்து வெளிவந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் பிசிக்கல் ரிவியூ டி என்ற இதழில் வெளியாகியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x