அதிபர் கிம்மை கொல்ல முயற்சி: அமெரிக்கா மீது வடகொரியா குற்றச்சாட்டு

அதிபர் கிம்மை கொல்ல முயற்சி: அமெரிக்கா மீது வடகொரியா குற்றச்சாட்டு
Updated on
1 min read

அதிபர் கிம் ஜோங் உன்னை கொலை செய்ய அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ தீட்டிய சதித் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது என்று வடகொரிய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த நாட்டு அரசு ஊடகத்தில் வெளியிடப் பட்டுள்ள செய்தியில் கூறியிருப்ப தாவது:

ரஷ்யாவில் பணியாற்றி வரும் வடகொரிய இளைஞரை அமெரிக்காவின் சிஐஏ உளவாளிகள் அணுகியுள்ளனர். அவரை மூளைச் சலவை செய்து வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை ரசாயன ஆயுதம் மூலம் கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர்.

இதற்காக தென்கொரிய அரசு உளவாளிகள், சம்பந்தப்பட்ட நபருக்கு பணம் மற்றும் செயற் கைக்கோள் தொலைபேசியை வழங்கியுள்ளனர். எனினும் சிஐஏவின் சதித் திட்டத்தை வடகொரியா வெற்றிகரமாக முறியடித்துள்ளது.

இவ்வாறு அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிபர் கிம்மை கொலை செய்ய நியமிக்கப்பட்ட நபர் யார் என்ற விவரத்தை வடகொரியா வெளியிடவில்லை. அதேபோல கொலை முயற்சி சதித் திட்டம் எவ்வாறு முறியடிக்கப்பட்டது என்பது குறித்தும் விளக்கம் அளிக்கவில்லை.

இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் தென்கொரிய அரசு வட்டாரங்கள் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டன. வடகொரியா அணுஆயுத சோதனை நடத்த தயாராகி வருவதால் அந்த நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க போர்க்கப்பல்கள், போர் விமானங்கள் தென்கொரியாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

கொரிய தீபகற்பத்தை போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில் அதிபர் கிம் ஜோங் உன்னை கொலை செய்ய சிஇஏ சதித் திட்டம் தீட்டியதாக வடகொரியா குற்றம் சாட்டியிருப்பது பதற்றத்தை பலமடங்கு அதிகரித்துள்ளது.

இதனிடையே, வடகொரியா வின் முக்கிய ராணுவ தளங்களை அதிபர் கிம் நேற்றுமுன்தினம் நேரில் ஆய்வு செய்தார். அப்போது போருக்கு தயார் நிலையில் இருக்குமாறு மூத்த தளபதிகளை அவர் அறிவுறுத்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in