எனர்ஜி டிரிங்க்ஸ்?

எனர்ஜி டிரிங்க்ஸ்?
Updated on
1 min read

மேற்கத்திய நாடுகளில் இப்போது விற்றுக்கொண்டிருக்கும், ‘உடனடி ஆற்றல் தரும்’ குளிர்பானங்களிடம் (எனர்ஜி டிரிங்ஸ்) எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஜெர்மன் நாட்டின் பான் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. “சக்தி தரும் பானங்கள் என்று விற்கப்படும் இவற்றில் காஃபின் அதிகமாக இருக்கிறது. அது இதயத்தைச் சுருங்கச் செய்கிறது. காஃபின் அதிகம் கலந்த பானங்களை அருந்தும்போது பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. இதயத் துடிப்பு அதிகரிக்கிறது, இதயம் சீரற்ற முறையில் வேகமாகத் துடிக்கிறது, ரத்தக்கொதிப்பு அதிகமாகிறது, திடீரென்று உடல் தூக்கிப்போடப்படுகிறது. இவற்றால் திடீர் மரணம்கூட ஏற்பட வாய்ப்பு இருக்கிறது” என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

100 மில்லி லிட்டரில் 32 மில்லி கிராம் காஃபினும் மற்றொரு 100 மில்லி லிட்டரில் 400 மில்லி கிராம் டாரின் என்ற ரசாயனம் கலந்த பானத்தைக் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களுக்குக் குடிக்கக் கொடுத்து, அவர்களுடைய இதயங்களைக் கண்காணித்து நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

பானம் குடித்த ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, இதயத்தின் இடது வென்டிரிக்கிள் அறை அப்படியே சுருங்குகிறது. ஆய்வு தொடங்கியபோது இருந்ததைவிட அதிகமாக இறுகுகிறது. பானத்தால் இதயத்துக்குப் பாதிப்பு ஏற்படுவதை இது காட்டுகிறது.

“தினசரி வாழ்க்கையில் இதன் விளைவுகள் எப்படி இருக்கும், விளையாட்டு வீரர்களானால் அவர்களுக்கு விளையாட்டின்போது என்ன விளைவுகளைத் தரும் என்று எங்களுக்குத் தெரியாது. சாதாரண ஆய்வின்போது இதயம் இப்படிச் சுருங்குவதை நாங்கள் பார்த்திருக்கிறோம்” என்று டாக்டர் டோர்னர் தெரிவிக்கிறார்.

“இதய நோயுள்ளவர்களுக்கு இந்த பானங்களைக் கொடுத்து இதுவரை சோதிக்கவில்லை. வயதானவர்களும் இதய நோயுள்ளவர்களும் குழந்தைகளும் இந்த பானங்களைத் தவிர்ப்பது நல்லது” என்கிறார் அவர்.

“இந்த பானங்களை குழந்தைகளுக்காக நாங்கள் விற்பதில்லை” என்று கூறுகிறது பிரிட்டனில் உள்ள குளிர் பானங்கள் தயாரிப்பாளர் சங்கம். ஆண்டுக்கு சுமார் 54,000 கோடி ரூபாய்க்கு பிரிட்டனில் இந்த பானங்கள் விற்கப்படுகின்றன. இந்த பானங்களில் காஃபின், சர்க்கரை, சில மூலிகைகள் கலக்கப்படுகின்றன. இது மற்ற நாடுகளுக்கும் பரவிக்கொண்டிருக்கிறது. ஜெர்மனி டாக்டரின் எச்சரிக்கை உரிய நேரத்தில்தான் வந்திருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in