

அமெரிக்க ஆவணங்களை விக்கிலீக்ஸுக்கு வழங்கிய குற்றத்துக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற அமெரிக்க ராணுவ வீரர் செல்சி மானிங்கின் தண்டனையைக் குறைத்து ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபராக தனது இறுதி நடவடிக்கையாக, பல்வேறு குற்றங்கள் தொடர்பாக தண்டனை பெற்ற 64 பேருக்கு மன்னிப்பு வழங்கியும், 209 பேருக்கு தண்டனையைக் குறைத்தும் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.
இதனை பத்திரிகையாளர் சந்திப்பில், வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் ஜான் எர்னஸ்ட் கூறினார்.
ஒபாமா நடவடிக்கையின் முக்கிய அம்சமாக, இராக் மற்றும் ஆப்கன் போர் தொடர்பாக பல்வேறு ஆவணங்களை விக்கிலீக்ஸுக்கு வழங்கிய குற்றத்துக்கு 35 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை பெற்ற அமெரிக்க ராணுவ செல்சி மானிங் தண்டனையும் குறைக்கப்பட்டு வரும் மே மாதம் அவர் விடுதலை செய்யப்பட இருக்கிறார்.
யார் இந்த செல்சி மானிங்?
29 வயதான செல்சிக்கு இராக் மற்றும் ஆப்கன் போர் தொடர்பான அமெரிக்கா ஆவணங்களை விக்கிலீக்ஸ் நிறுவனத்துக்கு வழங்கிய குற்றத்துக்காக அமெரிக்க நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது. பின் அவரது தண்டனை 35 வருட சிறை தண்டனையாக குறைக்கப்பட்டது.
சிறை தண்டனை விதிக்கப்பட்ட செல்சி, தனது மீதி நாளை தான் ஒரு பெண்ணாக வாழ நினைப்பதாக என்று கூறியிருந்தார்
பெண்ணாக மாறிய பின் செல்சி மானிங் எடுத்துக்கொண்ட புகைப்படம்
கிட்டத்தட்ட ஏழு வருடம் சிறை தண்டனை அனுபவித்த செல்சி சிறை தண்டனை குறைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட இருக்கிறார்.
செல்சியின் இந்த விடுதலை குறித்து அவரது வழக்கறிஞர் கூறும்போது, "என்னால் இதனை நம்ப முடியவில்லை. இன்னும் 120 நாட்களில் செல்சி விடுதலையாக இருக்கிறார்" என்று கூறினார்.