தெற்கு சூடானில் எதிர்ப்புப் படைகள் கட்டுப்பாட்டில் எண்ணெய் வயல்கள்

தெற்கு சூடானில் எதிர்ப்புப் படைகள் கட்டுப்பாட்டில் எண்ணெய் வயல்கள்
Updated on
1 min read

தெற்கு சூடானில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது. அந்த நாட்டின் முக்கிய எண்ணெய் வயல்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக எதிர்ப்புப் படை அறிவித்துள்ளது.

அதிபர் சல்வா கிர்க், முன்னாள் துணை அதிபர் ரிக் மசார் ஆகியோருக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் உள்நாட்டுப் போராக வெடித்துள்ளது.

அதிபர் சல்வா கிர்க், திங்கா என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். ரிக் மசார், நியூர் என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். இரு பிரிவினரும் ஆயுதங்களை ஏந்தி சண்டையிட்டு வருகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நடை பெற்று வரும் உள்நாட்டுப் போரில் இதுவரை 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தெற்கு சூடானில் முகாமிட்டுள்ள ஐ.நா. அமைதிப் படையில் பணியாற்றிய 3 இந்திய வீரர்களும் சில நாள்களுக்கு முன்பு சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஐ.நா. சபை, உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வர சல்வா கிர்க்கும், ரிக் மசாரும் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

அதிபர் எச்சரிக்கை

அதிபர் சல்வா கிர்க், ட்விட்டர் மூலம் வெளியிட்டுள்ள செய்தியில், வன்முறையில் ஈடுபடும் கும்பல் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். யாரும் தப்ப முடியாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் துணை அதிபர் ரிக் மசார் தலை மறைவாக உள்ளார். அவரது ஆதரவு படைகள் முக்கிய நகரங்களை கைப்பற்றி வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in