சிரியா மீது அமெரிக்கா தாக்குதல்: 59 ஏவுகணைகளை வீசியது; 15 பேர் பலி

சிரியா மீது அமெரிக்கா தாக்குதல்: 59 ஏவுகணைகளை வீசியது; 15 பேர் பலி
Updated on
2 min read

அமெரிக்க கடற்படை போர்க்கப்பல்கள் நேற்று சிரியா மீது 59 அதிநவீன ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 15 பேர் உயிரிழந்தனர். சிரியா விமானப் படையின் 9 போர் விமானங்கள் அழிக்கப்பட்டன.

சிரியாவில் ஷியா, சன்னி முஸ்லிம்களுக்கு இடையே பகைமை நீடித்து வருகிறது. கடந்த 1971-ம் ஆண்டில் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹபீஸ் அல்-சையத் சிரியாவின் அதிபராகப் பதவி யேற்றார். சுமார் 29 ஆண்டுகள் அவர் ஆட்சி செய்தார்.

ஹபீஸ் அல்-சையத்தின் மறைவை தொடர்ந்து அவரது மகன் பஷீர் அல்-ஆசாத் 2000 ஜூலையில் சிரியா அதிபராகப் பதவியேற்றார். கடந்த 2011 மார்ச் மாதத்தில் அவருக்கு எதிராக கிளர்ச்சி ஏற்பட்டது.

அதிபர் ஆசாத் பதவி விலக வேண்டும் என்று தாரா நகரின் பள்ளி சுவரில் சயாஸ்னே என்ற மாணவன் ஆட்சேபகரமான கருத்துகளை எழுதினான். அந்த மாணவனும் அவரது நண்பர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களை விடுதலை செய்யக் கோரி தாரா பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். அது புரட்சி யாக மாறியது. சன்னி பிரிவைச் சேர்ந்த எதிர்க்கட்சிகள், பல்வேறு கிளர்ச்சிக் குழுக்கள் ஆயுதப் போராட்டத்தில் இறங்கின. ஐ.எஸ். தீவிரவாதிகள் விஸ்வரூப வளர்ச்சி பெற்றனர். தற்போதைய நிலையில் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் உட்பட ஏராளமான கிளர்ச்சிக் குழுக்கள் செயல்படுகின்றன. அவற்றில் சில குழுக்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது. வேறு சில குழுக்களுக்கு துருக்கி ஆதரவு அளிக்கிறது.

அதேநேரம் அதிபர் ஆசாத்துக்கு ரஷ்யாவும் ஈரானும் முழுஆதரவு அளித்து வருகின்றன. ஆசாத்துக்கு பக்கபலமாக ரஷ்ய ராணுவம் சிரியாவில் முகாமிட்டு நேரடியாக போரில் ஈடுபட்டு வருகிறது. இதனால் அண்மைக்காலமாக ஆசாத்தின் கை ஓங்கி வருகிறது. கிளர்ச்சிக் குழுக்களின் தலைமை யிடமாக கருதப்பட்ட அலெப்போ நகரை அதிபர் ஆசாத் அண்மையில் கைப்பற்றினார்.

கடந்த 4-ம் தேதி கிளர்ச்சிக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள கான் ஷேக்கான் நகர் மீது அரசுப் படை போர் விமானங்கள் ரசாயன வாயு குண்டுகளை வீசியது. இதில் 11 குழந்தைகள் உட்பட 70 பேர் உயிரிழந்தனர். ஆனால் நாங்கள் ரசாயன குண்டுகளை வீசவில்லை, கிளர்ச்சிக் குழுக்களே இந்த தாக்குதலை நடத்தின என்று அதிபர் ஆசாத் வாதிட்டு வருகிறார்.

இந்தப் பின்னணியில் ரசாயன வாயு தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் உத்தர வின்படி அந்த நாட்டு கடற்படை நேற்று சிரியா மீது அதிநவீன ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

மத்திய தரைக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமெரிக்க கடற்படையின் யு.எஸ்.எஸ். ரோஸ், யு.எஸ்.எஸ். போர்ட்டன் போர்க் கப்பல்களில் இருந்து சிரியாவின் அல்-சாய்ரத் விமானப் படைத் தளத்தை குறிவைத்து 59 டோமாஹாக் ஏவுகணைகள் வீசப் பட்டன. இதில் 6 வீரர்கள், 4 குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். சிரியா விமானப் படையின் 9 போர் விமானங்கள் அழிக்கப்பட்டன.

ரஷ்ய அதிபர் கண்டனம்

அமெரிக்காவின் ஏவுகணை தாக்குதலுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.

சிரியா வான்பரப்பு பாதுகாப்பு தொடர்பாக அமெரிக்காவும் ரஷ்யா வும் ஒப்பந்தம் செய்திருந்தன. அந்த ஒப்பந்தத்தை ரஷ்யா ரத்து செய்துவிட்டது.

அமெரிக்க கடற்படையின் யு.எஸ்.எஸ். ரோஸ் போர்க்கப்பலில் இருந்து சீறிப் பாய்ந்த டோமாஹாக் ஏவுகணை. (அடுத்தபடம்) ரஷ்ய கடற்படையின் அட்மிரல் கிரிகோவிச் போர்க்கப்பல் இஸ்தான்புல் நகரில் இருந்து மத்திய தரைக் கடல் பகுதிக்கு விரைகிறது.

3-ம் உலகப் போர் மூளும் அபாயம்

சிரியாவின் விமானப் படைத் தளங்களில் ரஷ்ய விமானப் படை முகாமிட்டுள்ளது. அமெரிக்க கடற்படை ஏவுகணை தாக்குதலை தொடங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பாக ரஷ்ய படைத் தளபதிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவின் அல்-சாய்ரத் விமானப் படைத் தளத்தில் இருந்து வெளியேறி விடுமாறு ரஷ்ய தரப்புக்கு அமெரிக்க கடற்படை தளபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அமெரிக்காவின் ஏவுகணை தாக்குதலைத் தொடர்ந்து துருக்கி யின் இஸ்தான்புல் நகரில் நங்கூர மிட்டிருந்த ரஷ்யாவின் அட்மிரல் கிரிகோவிச் போர்க்கப்பல் உடனடி யாக மத்திய தரைக்கடல் பகுதிக்கு விரைந்தது. இது அதிநவீன ஏவுகணைகள் பொருத்தப்பட்ட நாசகார போர்க்கப்பல் ஆகும்.

இதுதொடர்பாக ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் கூறியபோது, “ஐ.நா. சபையின் மேற்பார்வையில் சிரிய அரசு வசம் இருந்த அனைத்து ரசாயன வாயு குண்டுகளும் அழிக்கப்பட்டுவிட்டன. தற்போது தீவிரவாதிகளிடம் மட்டுமே ரசாயன வாயு குண்டுகள் உள்ளன. சிரியா மீது அபாண்டமாக பழிசுமத்தி அத்துமீறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எங்களது போர்க்கப்பல்கள் மத்திய தரைக்கடலுக்கு விரைந்துள்ளன” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சர்வதேச அரசியல் நோக்கர்கள் கூறியபோது, சிரியா மீதான தாக்குதலை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இதன்காரணமாக 3-ம் உலகப் போர் மூளும் அபாயம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in