Published : 30 Dec 2013 12:00 AM
Last Updated : 30 Dec 2013 12:00 AM

இந்தியாவின் பதிலடி: அமெரிக்கா அதிர்ச்சி

இந்திய பெண் தூதர் தேவயானி கோப்ரகடே கைது விவகாரத்தில் இந்திய அரசின் பதில் நடவடிக்கையால் அமெரிக்கா அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

வேறுவழியின்றி தேவயானி வழக்கில் நடந்த தவறுகள் குறித்து அமெரிக்க அரசு அதிகாரிகள் இப்போது மறுஆய்வு நடத்தி வருகின்றனர். தேசிய பாதுகாப்பு கவுன்சில், வெளியுறவுத் துறை, நீதித்துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த மறுஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மூன்று துறை அதிகாரிகளின் முதல்கட்ட விசாரணையில் தேவயானி வழக்கை கையாண்டதில் பல்வேறு தவறுகள் இழைக்கப் பட்டிருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அமெரிக்க அதிகாரிகள் தங்கள் தவறுகளை மறைக்க வழி தேடிக் கொண்டிருக்கின்றனர்.

பென்டகன் அதிருப்தி

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்று அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் கருதுகிறது. மேலும் இந்திய ராணுவம் நவீனப்படுத்தப்பட்டு வருவதால் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், அதிநவீன ஆயுதங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்வதில் அமெரிக்கா அதிகம் ஆர்வம் காட்டி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் தேவயானி கோப்ரகடே வழக்கால் இருநாடுகளுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டிருப்பதை பென்டகன் விரும்பவில்லை.

இந்தியாவின் பதிலடி

தேவயானியை கைது செய்தது தவறு என்பதை இந்திய அரசு ஆணித்தரமாகவும் ஆதாரப் பூர்வமாகவும் அமெரிக்காவிடம் பலமுறை எடுத்துரைத்துள்ளது. விசா விண்ணப்பத்தில் தேவயானியின் மாத ஊதியமான 4500 அமெரிக்க டாலரை (சுமார் ரூ.2,78,000), அமெரிக்க போலீஸார் பணிப்பெண் சங்கீதாவுக்கு வழங்க ஒப்புக் கொள்ளப்பட்ட ஊதியம் என்று தவறாக புரிந்து கொண்டுள்ளனர். அமெரிக்காவுக்கான துணைத் தூதராக தேவயானி இருந்தபோது, ஐ.நா. சபைக்கான இந்திய தூதரக ஆலோசகராகவும் அவர் செயல்பட்டார்.

வியன்னா ஒப்பந்தத்தின்படி ஐ.நா. தூதரை கைது செய்யவோ, அவரது உடைமைகளை பறிமுதல் செய்ய வோ கூடாது. அந்த ஒப்பந்தத்தை அமெரிக்கா அப்பட்டமாக மீறியுள்ளது. தூதர் என்றும் பாராமல் பொது இடத்தில் அவரை கைவிலங்கிட்டு கைது செய்தது, ஆடைகளைக் களைந்து சோதனை நடத்தியது, போதை அடிமைகளுடன் ஒரே அறையில் அடைத்தது உள்ளிட்ட விவகாரங்களை இந்தியா கண்டனத்துடன் சுட்டிக் காட்டியுள்ளது.அமெரிக்காவின் நடவடிக்கை களுக்குப் பதிலடியாக டெல்லியில் பணியாற்றும் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கான பல்வேறு சலுகைகளையும் இந்திய அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது.

இந்தியத் தூதர் எச்சரிக்கை

அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் ஜெய்சங்கர் சில நாள்களுக்கு முன்பு அந்த நாட்டின் மூத்த வெளியுறவுத் துறை அதிகாரிகளை சந்தித்துப் பேசினார். அப்போது, அமெரிக்காவில் இந்தியத் தூதர்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்களோ அதே மரியாதைதான் இந்தியாவில் பணியாற்றும் அமெரிக்க தூதர்களுக்கும் அளிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கும் தொனியில் கூறியதாகத் தெரிகிறது.

ஆரம்பம் முதலே தேவயானி கைது விவகாரத்தில் இந்தியாவின் அணுகுமுறை வழக்கத்துக்கு மாறாக மிகக் கடுமையாக இருப்பதால் அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை வட்டாரங்கள் கூறியிருப்பதாவது: தேவயானி கோப்ரகடே விவகாரத்தில் இந்தியாவின் ஆக்ரோஷ செயல்பாடு களை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. இந்த விவகாரத்தில் என்ன நடந்தாலும் அதன் விளைவுகளை நாங்கள் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x