

இலங்கையில் சிறிசேனா தலைமையிலான அரசு, விடுதலைப் புலிகளின் ஆதிக்கத்திலிருந்த பகுதிகளில் பாதுகாப்பை குறைத்துவிட்டது என அந்நாட்டின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச குற்றச்சாட்டியுள்ளார்.
இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சட்டமன்ற உறுப்பினர் சுமந்தரனை கொலை செய்ய முயற்சித்ததாக முன்னாள் விடுதலைப் புலிகள் நான்கு பேரை இலங்கை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து புதன்கிழமை கருத்து தெரிவித்த முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்ச, "சிறிசேனா தலைமையிலான அரசு இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் (விடுதலைப் புலிகள் ஆதிக்கத்தின் கீழ் முன்பிருந்த பகுதிகள்) ராணுவ முகாம்களையும், உளவுத்துறை செயல்பாடுகளையும் குறைத்துவிட்டது.
சிறிசேனா அரசு, விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த 12,000 பேரை விடுதலை செய்து விடுதலைப் புலிகளுக்கு மறுவாழ்வு அளித்து புத்துணர்வு ஊட்டியது.
இந்த செயல்பாடுகளுக்கான விளைவை சிறிசேனா அரசு சந்தித்து வருகிறது. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் ராணுவக் கட்டுப்பாட்டை அகற்றக் கூடாது" என்று ராஜபக்ச கூறினார்.