வழக்கின் போக்கை திசை திருப்புவதா?- பணிப்பெண் சங்கீதாவின் வழக்கறிஞர் கேள்வி

வழக்கின் போக்கை திசை திருப்புவதா?- பணிப்பெண் சங்கீதாவின் வழக்கறிஞர் கேள்வி
Updated on
1 min read

பணிப்பெண்ணுக்கு எதிராக இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே இழைத்த குற்றங்கள் தொடர்பாக பேசுவதை விட்டுவிட்டு, தேவயானி கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து ஊடகங்கள் விரிவாக செய்தி வெளியிட்டு வருவது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது என்று வழக்கறிஞர் டானா சுஸ்மன் தெரிவித்தார்.

இந்திய துணைத் தூதர் மீது புகார் தெரிவித்துள்ள பணிப் பெண் சங்கீதா ரிச்சர்ட் சார்பில் வழக்கறிஞர் டானா சுஸ்மன் நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறார்.

தேவயானி கைது நடவடிக் கைக்கு பின்பு ஊடகங்களில் வெளி யாகி வரும் செய்திகள் குறித்து வழக்கறிஞர் டானா சுஸ்மன் கூறியதாவது:

இந்த விவகாரத்தில் தேவயானி மீதான குற்றச்சாட்டு பின்தள்ளப்பட்டு, அவரை கைது செய்த நடவடிக்கை தொடர்பான விஷயங்கள் பிரதானப்படுத்தப்பட் டுள்ளது எங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது.

சங்கீதாவுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை தேவயானி அளிக்க வில்லை. இது தொடர்பாக அமெரிக்க அரசுக்கு தவறான தகவலை தேவயானி அளித்துள் ளார். மேலும் கூடுதல் நேரம் பணிபுரியுமாறு சங்கீதாவை கட்டாயப்படுத்தியுள்ளார். தொடக்கத்தில் தேவயானி கூறியபடி செயல்பட்டு வந்த சங்கீதா, ஒரு கட்டத்தில் பொறுமை யிழந்து போலீஸாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

சங்கீதா மீது இந்தியாவில் எடுக்கப்பட்டு வரும் சட்டபூர்வமான நடவடிக்கைகள் குறித்து கருத்துத் தெரிவிக்க நான் விரும்பவில்லை. இத்தகைய சூழ்நிலையில், தன் மீதான குற்றச்சாட்டு குறித்து சங்கீதா ஊடகங்களில் பேட்டியளிக்க மாட்டார்.

சங்கீதா நீதி கேட்டு போராடி வருகிறார். தேவயானிக்கு எதிரான வழக்கில் சங்கீதா அரசுத் தரப்பு சாட்சி. இந்த வழக்கில் சங்கீதா தொடர்ந்து எங்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பார்.

இந்த வழக்கை அரசு கையாண்டு வரும் விதத்தைப் பார்க்கும்போது, பணிப்பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளை அமெரிக்க அரசு எவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்கிறது என்பதை உணரலாம்.

தூதரக அதிகாரி என்ற அடிப்ப டையில் தேவயானிக்கு சட்டப் பாதுகாப்பு உள்ளதாக இந்திய அதிகாரிகள் கூறுகின்றனர். தூதரக ரீதியாக அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மட்டுமே சட்டப் பாதுகாப்பு உள்ளது. இதுபோன்ற தனிப்பட்ட நடவடிக்கைகளுக்கு அதுபோன்ற பாதுகாப்பு எதுவும் இல்லை” என்றார்.

இப்போது, ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய தூதரக குழுவுக்கு தேவயானி மாற்றப்பட் டுள்ளதைத் தொடர்ந்து, அவருக்கு முழுமையான சட்டப் பாதுகாப்பு (தூதர் என்ற அடிப்படையில்) கிடைக்குமா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, “அதை அமெரிக்க அரசுதான் முடிவு செய்யும்” என்றார்.

எனினும், இப்போது சங்கீதாவும், அவரின் குடும்பத்தினரும் எங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை தெரிவிக்க வழக்கறிஞர் டானா சுஸ்மன் மறுத்துவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in