

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் ஆர்லாண்டோ நகர கேளிக்கை விடுதியில் தற்கொலைப் படை தீவிரவாதி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்திய தாக்குதலில் 50 பேர் பலி யாகினர். 53 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆர்லாண்டோ நகரில் தன் பாலின உறவாளர்களுக்காக 'பல்ஸ் நைட் கிளப்' என்ற கேளிக்கை விடுதி செயல்படுகிறது. அங்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புகுந்த தற்கொலைப்படை தீவிரவாதி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார்.
இதில் 50 பேர் உயிரிழந்தனர். 53 பேர் படுகாயம் அடைந்தனர். அங்கு கூடியிருந்த 100 பேரை தீவிரவாதி பிணைக்கைதியாக பிடித்து வைத்திருந்தான்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு ஸ்வாட் போலீஸார் விரைந்து சென்றனர். தீவிரவாதியின் கவனத்தை திசை திருப்பும் வகையில் அருகில் சக்திவாய்ந்த குண்டை வெடிக்கச் செய்தனர். அந்த பயங்கர சத்தத்தில் தீவிரவாதியின் கவனம் சிதறியபோது ஸ்வாட் போலீஸார் அவனை சுட்டுக்கொன்றனர்.
அடையாளம் தெரிந்தது:
இந்த சம்பவம் குறித்து எப்பிஐ போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் கூறியதாவது:
முதல்கட்ட விசாரணையில் தாக்குதலை நடத்திய நபர் புளோரிடா மாகாணம் போர்ட் செயின்ட் லூஸி நகரைச் சேர்ந்த ஒமர் மதீன் என்பது தெரியவந்துள்ளது.
அவர் தனது உடலில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை கட்டியிருந்துள்ளார். அதிநவீன தானியங்கி துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளார். கேளிக்கை விடுதியில் குழுமியிருந்தவர்களை பிணைக்கைதியாக பிடித்து வைத்து மிரட்டியுள்ளார்.
தீவிரவாத முகாமில் பயிற்சி பெற்ற தற்கொலைப்படை தீவிரவாதி போன்று ஒமர் செயல்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தானை பூர்விக மாகக் கொண்ட அவரது பின்னணி குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இது உள் நாட்டு தீவிரவாத தாக்குதல். அவருக்கு ஐ.எஸ். அமைப்பின்பால் ஈர்ப்பு இருந்தாலும் அவர் நேரடியாக ஐ.எஸ். கட்டுப்பாட்டில்தான் இருக்கிறாரா என்பதை இன்னும் உறுதிசெய்யவில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
ஒபாமா கண்டனம்:
ஆர்லாண்டோ துப்பாக்கிச் சூடு சம்பவம் தீவிரவாத செயல், வெறுப்பை வெளிப்படுத்தும் செயல் என அமெரிக்க அதிபர் ஒபாமா கண்டனம் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் பேசிய அவர், "எந்த ஒரு அமெரிக்கர் மீது நடத்தப்படும் தாக்குதலும் ஒட்டுமொத்த அமெரிக்க மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலாகும்" என்றார்.
டிரம்ப், ஹிலாரி வருத்தம்:
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசுக்கு கட்சி வேட்பாளர்களுள் ஒருவரான டொனால்ட் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆர்லாண்டோ சம்பவம் மிகவும் மோசமானது. போலீஸ் விசாரணையில் தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. பலர் உயிரிழந்துள்ளார். பலர் படுகாயமடைந்துள்ளனர்" என்றார்.
ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளின்டன், "ஆர்லாண்டோ துயர சம்பவ செய்தியுடன் பொழுது விடிந்திருக்கிறது. தகவல்கள் எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், எனது எண்ணங்கள் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தாரை சுற்றி வருகிறது" என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
'நான் ஐ.எஸ். தீவிரவாதி'
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருக்கும் அமாக் செய்தி நிறுவனம், "ஆர்லாண்டோவில் தாக்க்தல் நடத்திய ஒமர் மதீன் தாக்குதலுக்கு சில நிமிடங்களுக்கு முன்னர் 911 அவசர எண்ணை அழைத்து தான் ஐ.எஸ். தலைவர் பகர் அல்- பாக்தாதியுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறியுள்ளார்" என செய்தி வெளியிட்டுள்ளது.