Published : 22 Mar 2014 01:44 PM
Last Updated : 22 Mar 2014 01:44 PM

உடைந்த பாகங்கள் கடலில் மூழ்கியிருக்கலாம்: ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் தகவல்

தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் உடைந்த 2 துண்டுகள் மிதப்பதை செயற்கைக்கோள் உதவியுடன் ஆஸ்திரேலிய விமானப் படை கண்டுபிடித்தது. கடந்த 2 நாள்களாக அவற்றை தேடியும் இதுவரை எந்தத் தடயமும் கிடைக்காததால் அவை கடலில் மூழ்கியிருக்கலாம் என்று ஆஸ்திரேலிய துணை பிரதமர் வாரன் டிரஸ் தெரிவித்துள்ளார்.

சம்பவ பகுதியில் ஆஸ்திரேலியாவின் இரண்டு போர் விமானங்கள், நியூசிலாந்து, அமெரிக்காவைச் சேர்ந்த தலா ஒரு போர் விமானம் ஆகியவை தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன. இவை தவிர அந்த வழியாகச் சென்ற 6 சரக்கு கப்பல்களும் தேடுதல் பணியில் இணைந்துள்ளன.

செயற்கைக்கோளில் அடையாளம் காணப்பட்ட பகுதியில் சுமார் 23 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் தேடியும் இதுவரை எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. சம்பவ பகுதிக்கு பிரிட்டன், மலேசியா, சீனா உள்ளிட்ட நாடுகள் அதிநவீன போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளன. அவை விரைவில் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வானிலையால் பின்னடைவு

தெற்கு இந்தியப் பெருங்கடலில் தற்போது மோசமான வானிலை நிலவுகிறது. இதனால் தேடுதல் பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து நியூசிலாந்து ஏர் கமாண்டர் மைக் யார்ட்லி கூறியபோது, எங்களது பி3 ஒரியன் போர் விமானம் சம்பவ இடத்தில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது. விமானத்தின் ரேடாரில் டால்பின்கள், திமிங்கலங்கள்கூட பதிவாகியுள்ளன. ஆனால் மலேசிய விமானத்தின் பாகங்கள் எதுவும் தென்படவில்லை, தேடுதல் பணி இன்னும் சில நாள்களுக்கு நீடிக்கக்கூடும் என்றார்.

உடைந்த துண்டுகள் மூழ்கியிருக்கலாம்

“கடந்த 16-ம் தேதி எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படத்தை ஆதாரமாக வைத்தே தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமையுடன் 6 நாள்களாகி விட்டதால் செயற்கைக்கோள் புகைப்படத்தில் தெரிந்த 2 துண்டுகளும் கடலில் மூழ்கியிருக்கலாம்” என்று ஆஸ்திரேலிய துணை பிரதமர் வாரன் டிரஸ் தெரிவித்தார்.

தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலியா, அமெரிக்கா, நியூசிலாந்தின் 4 போர் விமானங்களும் தொடர்ந்து 14 மணி நேரத்துக்கும் அதிகமாக பறக்கும் திறன் கொண்டவை. ஆனால் ஆஸ்திரேலியாவின் பெய்த் விமானத் தளத்தில் இருந்து சம்பவ இடத்தைச் சென்றடைய சுமார் 6 மணி நேரமாவதால் ஒவ்வொரு விமானமும் 2 மணி நேர தேடுதலுக்குப் பிறகு மீண்டும் தளத்துக்கு திரும்புகின்றன.

சம்பவ கடல் பகுதியில் ரேடியோ அதிர்வலைகளை வெளியிடும் மிதவைகளும் போர் விமானத்தில் இருந்து வீசப்பட்டுள்ளன. அதன்மூலம் கடலுக்கு அடியில் ஏதாவது பொருள்கள் மூழ்கியிருந்தால் எளிதில் கண்டுபிடிக்க முடியும் என்று ஆஸ்திரேலிய விமானப் படை மூத்த அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அந்தமான் கடலில் இந்தியா தேடுதல்

இந்திய விமானப் படை சார்பில் 4 போர் விமானங்களும் கடற்படை சார்பில் 4 போர்க் கப்பல்களும் அந்தமான் மற்றும் இதர பகுதிகளில் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் கேப்டன் டி.கே.சர்மா கூறியபோது, உலகின் பல்வேறு நாடுகளின் கடற்படைகள் மலேசிய விமானத்தை தேடி வருகின்றன. இந்தியாவும் அந்தமான் கடல் பகுதியில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது என்று தெரிவித்தார்.

14-வது நாள்

கடந்த 8-ம் தேதி 239 பேருடன் மாயமான மலேசிய விமானத்தை சுமார் 26-க்கும் மேற்பட்ட நாடுகள் இரவு பகலாக தேடி வருகின்றன. வெள்ளிக்கிழமையுடன் 14 நாள்களாகியும் இதுவரை எந்தத் தடயமும் கிடைக்காதது உலகத்தையே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x