

இந்திய துணைத் தூதரை கைது செய்தபோது விதிமுறைகளின்படி செயல்பட்டதாக அமெரிக்கா பதிலளித்துள்ளது.
நியூயார்க் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் துணைத் தூதராகப் பணியாற்றும் தேவயானி கோப்ரகடேவை, விசா மோசடி வழக்கில் அந்த நாட்டு போலீஸார் கடந்த வியாழக்கிழமை கைது செய்தனர்.
பள்ளியில் குழந்தைகளை விட்டுவிட்டு திரும்பியபோது பொது இடத்தில் தேவயானியை போலீஸார் கைது செய்தனர். கையில் விலங்கிட்டு அழைத்துச் சென்றனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் ரூ.1.5 கோடி பிணைத்தொகையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் காவல் நிலை யத்துக்கு தேவயானியை அழைத் துச்சென்ற நியூயார்க் போலீஸார், அவர் அணிந்திருந்த உடையை அகற்றி சோதனை செய்துள்ளனர். விசாரணையின்போது, போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டோருடன் தேவ யானியை நிற்க வைத்துள்ளனர் என்று ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் இச்செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், அமெரிக்க தூதர் நான்சி பாவெலை அழைத்து தனது கண்டனத்தை தெரிவித்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத் துறை துணை செய்தித் தொடர்பாளர் மேரி கார்ப் கூறியதாவது: “தேவயானியை கைதுசெய்தபோது, தூதரக அதிகாரிகளை கைது செய்யும்போது பின்பற்றப்படும் நடைமுறைகளின்படிதான் போலீஸார் செயல்பட்டுள்ளனர்.
அவரை தூதரக பாதுகாப்புப் பிரிவு போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தின் நேரடி ஆணைகளை ஏற்றுச் செயல்படும் போலீஸ் பிரி விடம் ஒப்படைத்துள்ளனர்.
நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவு தொடர்பாக நடை முறையில் உள்ள வியன்னா உடன்படிக்கையில் கூறப்ப ட்டு ள்ள விதிமுறைகள் எதுவும் மீறப்பட வில்லை. தூதரக ரீதியிலான செயல்பாடுகளின் போது மட்டுமே சட்டரீதியான பாதுகாப்பு அவருக்கு உள்ளது. இதுபோன்ற விசா மோசடிக்கெல்லாம், அந்த சட்டப் பாதுகாப்பு செல்லாது. அமெரிக்கா மட்டுமல்ல. உலகெங்கும் இந்த நடைமுறைதான் உள்ளது” என்றார்.- பி.டி.ஐ.