Last Updated : 03 Jun, 2016 04:50 PM

 

Published : 03 Jun 2016 04:50 PM
Last Updated : 03 Jun 2016 04:50 PM

மகா சாத்தான் அமெரிக்கா, தீமை பிரிட்டன்: ஈரான் தாக்கு

ஈரான் தலைவர் அயதுல்லா அலி காமீனி, அமெரிக்காவை ‘மகா சாத்தான்’ என்றும் பிரிட்டன் ஒரு ‘தீமை’ என்றும் கடுமையாக சாடியுள்ளார்.

பிராந்தியம் சார்ந்த விவகாரங்களில் தங்களின் மிகப்பெரிய விரோதிகளான இந்த இருநாடுகளுடனும் ஒத்துழைக்க வேண்டிய அவசியம் ஈரானுக்கு இல்லை என்றும் காமீனி தெரிவித்துள்ளார்.

2015-ம் ஆண்டு ஈரானுக்கும் அமெரிக்கா உட்பட 6 முக்கிய பெரிய நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட அணு ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா நேர்மையாக இல்லை என்று சாடிய காமீனி. அணுகுண்டு தயாரிப்பதாக தங்கள் நாட்டின் மீது சந்தேகத்தை உலக அளவில் அமெரிக்கா பரப்பியது என்று குற்றம்சாட்டினார்.

ஆனால் அந்த அணு ஒப்பந்த்தத்தின் அடிப்படையில்தான் ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடைகள் கடந்த ஜனவரியில் விலக்கப்பட்டன.

பணவீக்கம், வேலையின்மை, மற்றும் பிற பொருளாதார இன்னல்களை ஈரான் சந்தித்து வருவதால் அயதுல்லா அலி காமீனி, அதிபர் ஹசன் ரூஹானிக்கு அணு விவகாரத்தில் தனது ஆதரவை அளித்ததாக தெரிவித்தார்.

“1979-ம் ஆண்டு இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு அமெரிக்கா தொடர்ந்து ஈரானை தனது விரோதியாகவே பாவித்து வருகிறது. எனவே மிகப்பெரிய தீமையான பிரிட்டனையும், மகா சாத்தானாகிய அமெரிக்காவையும் நம்புவது மிகப்பெரிய தவறு.

பிராந்திய நெருக்கடி விவகாரங்களில் அமெரிக்காவுடன் ஒத்துழைக்க மாட்டோம். இந்தப் பகுதிகளில் அமெரிக்காவின் நோக்கம் ஈரானின் நோக்கங்களுக்கு முற்றிலும் நேர் எதிரானது” என்று ஈரான் அரசுத் தொலைக்காட்சியில் அவர் பேசும் போது கடுமையாகச் சாடினார் அயதுல்லா காமீனி.

ஐ.எஸ்., அல்கய்தாவை எதிர்கொள்ள உதவிய ஈரான்

மத்திய கிழக்கில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்குமே பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கும் வேளையில் அமெரிக்காவுடன் இந்த விஷயத்தில் ஈரான் ஒத்துழைத்தது. ஆப்கானிஸ்தானில் அல்கய்தாவையும், இராக்கில் ஐஎஸ் அமைப்பையும் எதிர்கொள்ள ஈரான் அமெரிக்காவுக்கு ஒத்துழைப்பு நல்கியது.

ஆனால், அமெரிக்கா மற்றும் அதன் மத்திய கிழக்கு கூட்டணி நாடுகள் ஈரான் மீதே பயங்கரவாத ஆதரவு குற்றச்சாட்டை சுமத்தியது. சிரியா, இராக், ஏமன் உள்நாட்டு விவகாரங்களில் ஈரான் தலையிடுவதாகக் குற்றம்சாட்டின.

சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு ஈரான் நெருக்கமானது, எனவே ஐஎஸ் மற்றும் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களையும் அடக்க ஈரான் ராணுவ, பொருளாதார உதவிகளை சிரியா அரசுக்கு வழங்கி வந்தது.

மேற்கு நாடுகளுடன் வர்த்தகம் அதிகரிப்பு:

ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டதை அடுத்து ஈரான் மேற்கு நாடுகளுடன் தனது வர்த்தகத்தை அதிகரித்துள்ளது. ஆனாலும் அமெரிக்காவின் சில தடைகள் நடைமுறையில் உள்ளன. ஈரானுடன் வர்த்தகம் வைத்துக் கொள்ள அமெரிக்க வங்கிகளுக்கு தடை உள்ளது.

இதனையடுத்தே, “மனித உரிமைகள், பயங்கரவாதம் என்பதைக் காட்டி மிரட்டி, அமெரிக்கா தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலிருந்து தப்பித்துக் கொள்கிறது” என்று அயதுல்லா அலி காமீனி சாடியுள்ளார்.

“நாம் வலுவாகவும் ஒற்றுமையுடனும், புரட்சிகரமாகவும் இருந்தால் ஈரான் மீது அவதூறு பரப்புபவர்களையும், ஈரானுக்கு எதிரானவர்களையும் வெற்றியடைய விடாமல் தடுக்கலாம்” என்று கூறிய காமீனி “மேற்குடன் பொருளாதார உறவுகளில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்று எச்சரித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x