Published : 11 Nov 2013 04:34 PM
Last Updated : 11 Nov 2013 04:34 PM

விண்வெளியில் இருந்து பூமிக்குத் திரும்பியது ஒலிம்பிக் ஜோதி

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் வலம்வந்த 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கான ஜோதி, விண்வெளியில் இருந்து பூமிக்கு இன்று திரும்பியது.

ரஷியாவில் கருங்கடல் கடற்கரையோரமாக அமைந்துள்ள சோச்சி நகரில் 22-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வரும் 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்குகிறது.

இந்தப் போட்டிக்கான ஒலிம்பிக் ஜோதி விண்வெளிக்குக் கொண்டு செல்லப்பட்ட வரலாற்றுச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

முதன்முறையாக பூமியில் இருந்து 420 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி மையத்தின் வெளியே ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்படாத நிலையில் காண்பிக்கப்பட்டது. ரஷ்ய விண்வெளி வீரர் ஒலெக் கோடோவ் விண்வெளி மையத்திலிருந்து வெளியே வந்து மிதந்தபடி, ஒலிம்பிக் ஜோதியை உயர்த்திப் பிடித்தார்.

அதனை சக விண்வெளி வீரர் செர்ஜி ரையாஸன்ஸ்கை விடியோவாக எடுத்தார். இக்காட்சியை ரஷிய தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பின. கோடோவ் ஒலிம்பிக் ஜோதியைப் பெருமையுடன் அசைத்த போது, அதனைப் பார்த்து ரையாஸன்ஸ்கை மிக அழகாக இருக்கிறது எனக் கூறினார்.

அந்தக் காட்சியை ரஷ்ய தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பின. 'இந்தத் தருணம் நிகழ்வதை நம்பமுடியவில்லை. இதை சாத்தியமாக்க ரஷியாவால் மட்டுமே முடியும். அறிவியலிலும் விளையாட்டிலும் ரஷியாவுக்கு இணை ரஷியாதான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது' என தொலைக்காட்சி வர்ணனையாளர்கள் பெருமையுடன் வருணித்தனர்.

இந்த ஒலிம்பிக் ஜோதி விண்வெளியில் ஒளிரவிடப்படவில்லை. ஒலிம்பிக் ஜோதி நழுவி வேறெங்கும் சென்று விடாமல் இருப்பதற்காக, கோடாவ்வின் விண்வெளி உடையுடன் பிணைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், விண்வெளிக்குக் கொண்டுசெல்லப்பட்ட அந்த ஒலிம்பிக் ஜோதி இன்று (திங்கள்கிழமை) பூமிக்குக் கொண்டு வரப்பட்டது.

ரஷிய விண்வெளி வீரர் பியோதர் யூரிசிகின், நாசா விண்வெளி வீரர் கரேன் நைபெர்க், இத்தாலி விண்வெளி வீரர் லுகாபர்மிடானோ ஆகியோர் சோயுஸ் விண்கலத்தின் மூலம் கஜகஸ்தானில் தரையிறங்கினர். யூரிசிகின், அந்த ஒலிம்பிக் ஜோதியை ரஷிய விண்வெளி மைய அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

விண்வெளியில் இருந்து பூமிக்குத் திரும்பிய வீரர்கள் நலமுடன் இருப்பதாக ரஷிய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஏற்கெனவே 1996 அட்லாண்டா ஒலிம்பிக் மற்றும் 2000ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக் போட்டிகளின் போது அமெரிக்க விண்கலம் மூலம் ஒலிம்பிக் ஜோதி விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து (ஐஎஸ்எஸ்) வெளியே கொண்டு வரப்படவில்லை.

இப்போது முதன்முறையாக வெளியே கொண்டு வரப்பட்டுள்ளது. 1980ஆம் ஆண்டுக்குப் பிறகு குளிர்கால ஒலிம்பிக் போட்டியை ரஷியா தற்போதுதான் நடத்துகிறது. 1980 ஆம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் மாஸ்கோவில் நடைபெற்றாலும், சோவியத் ரஷியா ஆப்கானிஸ்தான் மீது படையெடுப்பை மேற்கொண்டதால், மேற்கத்திய நாடுகள் பெரும்பாலானவை அப்போட்டியில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x