

வடக்கு பிரேசிலின் அமேசானாஸ் பகுதியில் உள்ள அனிசியோ ஜோபிம் சிறையில் இரண்டு கும்பல்களுக்கு இடையே நடந்த மோதலால் 56 கைதிகள் பலியாகினர்.
1992-ல் நடந்த மிகப்பெரிய சிறை மோதலுக்குப் பிறகு பிரேசிலில் இத்தகைய சம்பவம் நடந்து 56 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலின்படி, ஞாயிற்றுக்கிழமை மதியத்தில் இருந்து, திங்கள்கிழமை காலை வரை மோதல் நடந்துள்ளது. பிரேசிலின் குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்ட இரண்டு பெரிய கும்பல்களுக்கு இடையில் சண்டை நடைபெற்றதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் அமேசானஸ் அதிகாரிகள் சிறையில் இருந்து 60 பேர் பலியானதாகத் தெரிவித்தனர். ஆனால் மாகாண பொது பாதுகாப்பு செயலாளர் 56 பேர் இறந்துள்ளதாகக் கூறியுள்ளார்.
மோதலின் போது, 12 சிறை அதிகாரிகள் பணயக்கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டனர். அவர்கள் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.
இந்த மோதலின்போது 112 கைதிகள் தப்பிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறையைத் தனியார் நிறுவனம் கவனித்து வந்தது குறிப்பிடத்தக்கது.