

நியூசிலாந்தைச் சேர்ந்த சாரா தாம்சன் குதிரை சவாரியைப் போல பசு மாட்டின் மீது சவாரி செய்கிறார். 11 வயதில் மாட்டு சவாரியை ஆரம்பித்த சாரா, 18 வயதில் அநாயசமாக ஓட்டிச் செல்கிறார். ‘எனக்குக் குதிரையேற்றம் மிகவும் பிடிக்கும். ஒரு குதிரை வாங்குவதற்கு அதிகம் செலவாகும் என்பதால் என் பெற்றோர் வாங்கித் தரவில்லை. ஆனாலும் குதிரை சவாரி ஆர்வம் குறையவே இல்லை. ஒருநாள் எங்கள் வீட்டில் வளர்த்து வரும் மாடுகளில் ஏறி என் தம்பி விளையாடிக்கொண்டிருந்தான். அதைப் பார்த்ததும் மாட்டையே குதிரையாக நினைத்து, சவாரி செய்தால் என்ன என்று தோன்றியது.
அதுவரை எனக்கு மாட்டின் மீது ஏறிப் பழக்கமில்லை. தரையில் அமர்ந்திருந்த 6 மாதக் கன்றான லிலாக் மீது ஆர்வத்துடன் குதித்தேன். ஆனால் லிலாக் பயப்படவும் இல்லை, கோபப்படவும் இல்லை. அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தது. அன்று முதல் லிலாக் மீது சவாரி செய்யும் பயிற்சியில் இறங்கினேன். மாட்டின் மீது சவாரி செய்யும் பெண் என்ற அளவுக்கு எங்கள் ஊரில் பிரபலமானேன். 7 ஆண்டுகளில் லிலாக் வளர்ந்துவிட்டாள். எனக்கும் அவளுக்குமான புரிதல் நன்றாக இருக்கிறது. லிலாக் முதுகில் அமர்ந்தால், குதிரையா மாடா என்று வித்தியாசம் தெரியாத அளவுக்குப் பாய்ந்து ஓடுகிறாள்.
குறுக்கே பெரிய மரம், பள்ளம் எது வந்தாலும் அழகாகத் தாண்டி விடுவாள். என்னுடைய லிலாக் சவாரி குறித்த படங்களை இன்ஸ்டாகிரமில் வெளியிட்டேன். லிலாக்கும் நானும் இப்போது உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டோம். 1.4 மீட்டர் உயரத்துக்கு லிலாக் தாண்டிக் குதிப்பதை எல்லோரும் ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள். பள்ளத்தைக் கண்டால் மட்டுமே அவளுக்குப் பிடிக்காது. மற்றபடி புல்வெளிகளில் நடப்பதும் ஆற்றில் குதித்து நீந்துவதும் இவளுக்கு மிகவும் பிடிக்கும். இப்போது குதிரை சவாரி மீது எனக்கு ஆர்வமே இல்லை’ என்கிறார் சாரா தாம்சன்.
உலக மசாலா: அட! பசு மாட்டை, குதிரையாக மாற்றிவிட்டாரே இந்த சாரா!
கையுறைகளை மாட்டிக்கொண்டு ஆபத்தான வேலைகளைச் செய்யும்போதும் விரல்களுக்கு எளிதில் காயம் ஏற்படும் வாய்ப்பு அதிகம். இதற்காகவே சிலியைச் சேர்ந்த ஜார்ஜ் ஸ்கோம்பிக் புதிய கையுறைகளை உருவாக்கியிருக்கிறார். ‘இன்று ஆபத்தான வேலைகளைச் செய்பவர்களுக்குப் பாதுகாப்பான காலுறைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் மரத்தை அறுக்கும்போதும் சுத்தியலால் அடிக்கும்போது சாதாரண கையுறைகள் விரல்களைக் காப்பாற்றுவதில்லை. பல்வேறு பரிசோதனைகளுக்குப் பிறகு இந்தப் பாதுகாப்பான கையுறைகளை உருவாக்கியிருக்கிறேன். என் கையுறைகளை மாட்டிக்கொண்டு சுத்தியலால் ஓங்கி அடித்தாலும் விரல்கள் பாதிக்கப்படாது. மரம் அறுக்கும்போது ரம்பம் தவறுதலாக கையுறை மீது பட்டாலும் காயம் ஏற்படாது. மிகப் பெரிய கல் தவறி கை மீது விழுந்தாலும் வலிக்காது. இந்தக் கையுறைகள் பயன்படுத்துவதற்கும் எளிதாக இருக்கிறது. என்னுடைய Mark VIII கையுறைகளை சுரங்கம், மீன்பிடிப்பு, தொழிற்சாலைகளில் பயன்படுத்தினால் விபத்துகளில் இருந்து தப்பிக்கலாம்’ என்கிறார் ஜார்ஜ் ஸ்கோம்பிக்.
அவசியமான கண்டுபிடிப்பு!