Published : 20 Nov 2014 09:23 AM
Last Updated : 20 Nov 2014 09:23 AM

உலக மசாலா: ஒரு ஆண்டு முழுவதும் ஒரே ஆடை

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் கார்ல் ஸ்டீஃபனோவிக், ஒரு வித்தியாசமான பரிசோதனையைச் செய்திருக்கிறார். அவருடன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் பெண்களின் ஆடைகள், முடி அலங்காரம் போன்றவற்றைக் கடுமையாக விமர்சித்து இமெயில்கள் வருகின்றன. பெண்களை மட்டும்தான் இப்படிப் பார்வையாளர்கள் கவனித்து விமர்சிக்கிறார்களா, இல்லை ஆண்களையும் விமர்சிப்பார்களா என்பதை அறிந்துகொள்ள முடிவு செய்தார் கார்ல். ஓராண்டு முழுவதும் ஒரே ஒரு நீல நிற கோட் மட்டுமே நிகழ்ச்சிகளில் போட்டுக்கொண்டு வந்தார். இதுவரை ஒருவர் கூட அவர் ஒரே கோட்டை அணிந்து வருவது பற்றி விமர்சிக்கவில்லை.

கார்லின் சக பணியாளர்கள் இருவரைத் தவிர வேறு யாருக்கும் இந்த விஷயம் தெரியாது. அதனால் தொலைக்காட்சி அலுவலகத்திலும் கூட யாரும் ஒரே கோட் அணிவது பற்றிக் கேட்கவில்லை. ‘நியாயமாகப் பேட்டி எடுக்கிறேன். நகைச்சுவையோடு நிகழ்ச்சியைத் தொகுத்து அளிக்கிறேன். என்னுடைய வேலையைச் சிறப்பாகச் செய்கிறேன். அதேபோலத்தான் பெண்களும் வேலை செய்கிறார்கள். ஆனால் என் ஆடைகளில் அக்கறைக் காட்டாதவர்கள், பெண்கள் ஆடைகளில் மட்டும் கவனம் செலுத்துவது வியப்பாக இருக்கிறது’ என்கிறார் கார்ல். ஆண்களுக்கான ஆடைகள் மிகவும் குறைவுதான். அதனால் அவை கவனம் ஈர்ப்பதில்லை. பெண்களுக்கு ஏராளமான ஆடைகள் இருப்பதால் எளிதாகக் கவனம் ஈர்த்துவிடுகிறது என்கிறார்கள்.

கண்ல விளக்கெண்ணெய் ஊத்திக்கிட்டு பெண்களைக் கவனிக்குது இந்தச் சமூகம்…

மனோன் ஆஸ்சிவூர்ட் 38 வயதான ட்ராக்டர் டிரைவர். அவருடைய லட்சியம் பனி சூழ்ந்த அண்டார்டிகாவுக்கு ட்ராக்டரில் செல்வதுதான். மனோனுக்கு ட்ராக்டர் பயணம் ஒன்றும் புதிதல்ல. 2005ம் ஆண்டு ஹாலந்திலிருந்து கிளம்பி ஐரோப்பா, ஆப்பிரிக்கா என்று 38,000 மைல்களை டிராக்டரில் கடந்திருக்கிறார். அடுத்து அண்டார்டிகாவுக்குச் செல்ல நினைத்தபோது, அது கைகூடவில்லை. வீட்டிலிருந்து புத்தகம் எழுதினார், தன்னம்பிக்கை வகுப்புகள் நடத்தினார், குழந்தை பெற்றுக்கொண்டார். ஆனால் அவருடைய லட்சியப் பயணத்தை அவரால் மறக்க முடியவில்லை. மாஸி பெர்குசன் நிறுவனத்திலிருந்து அண்டார்டிகா செல்லும் வாய்ப்பு வந்தது.

பனிப்பகுதியில் ஓட்டக்கூடிய அளவுக்கு திறன் பெற்ற நவீன ட்ராக்டர் உருவாக்கப்பட்டது. அண்டார்டிகா 2 என்று பெயரிடப்பட்ட அந்த டிராக்டர் கிளம்புகிறது. இதுவரை தனியாகப் பயணம் செய்த மனோன், இந்தத் தடவை 7 பேர் கொண்ட குழுவுடன் பயணம் செய்கிறார். பனிப்பரப்பில் 2,800 மைல்களை டிராக்டரில் கடக்க இருக்கிறார். பனிப்புயல் ஏற்பட்டால், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கூடாரத்துக்குள் ட்ராக்டரை நிறுத்திவிடலாம். பனியோ, புயலோ, குளிரோ உள்ளே தாக்காது. ’கனவுகளை ஒருபோதும் யாருக்காகவும் கைவிடாதீர்கள்’ என்று சொல்லும் மனோன், ஒரு வயது குழந்தையைப் பிரிந்து இந்தப் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்!

எலோருக்குமா கனவு நிறைவேறுது… கலக்குங்க மனோன்!

சீனாவைச் சேர்ந்த ஹீ லீஷெங் வித்தியாசமான அப்பா. அவரது நான்கு வயது மகன் ஹீ ஈடியை அழைத்துக்கொண்டு 20 நாட்களில் 1,800 மைல்களைக் கடந்து பயணம் செய்திருக்கிறார். சால்ட் லேக் என்று அழைக்கப்படும் அந்தப் பகுதியில் மிகவும் மோசமான வானிலை நிலவும். கடினமான சூழ்நிலைகளைச் சமாளிப்பது, தண்ணீரையும் உணவையும் தேடுவது, இரவில் நட்சத்திரங்களை ஆராய்வது, நிலத்துக்கு அடியில் உறங்குவது போன்ற விஷயங்களைக் குழந்தைக்குக் கற்றுத் தருவதுதான் இந்தப் பயணத்தின் நோக்கம்.

லீஷெங்குடன் இன்னும் நான்கு குழந்தைகளும் அவர்கள் அப்பாக்களும் கிளம்பினார்கள். உணவு, மருந்து, பாதுகாப்பு வசதிகளோடு கிளம்பியவர்கள், வெற்றிகரமாகத் தங்கள் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பியிருக்கிறார்கள். ‘குறை மாதத்தில் பிறந்த என் மகனை, இன்று எல்லாவற்றிலும் சிறந்தவனாகவும் வலிமையானவனாகவும் மாற்றியிருக்கிறேன்’ என்று பெருமிதம் கொள்கிறார் லீஷெங்.

அபூர்வ அப்பா!

தூக்கி எறியப்பட்ட பொருட்கள் இன்று பல கோடி மதிப்புள்ள பொருட்களாக மாறியிருக்கின்றன! ஈ.டி என்று அழைக்கப்பட்ட வீடியோ கேம்கள் 1970லிருந்து 1980 வரை விற்பனை செய்யப்பட்டன. ஆனால் அந்தக் காலத்தில் வீடியோ கேம்களுக்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லை. எனவே நியுமெக்ஸிகோவில் வீடியோ கேம் சிடிகளை எல்லாம் நிலத்தில் புதைத்துவிட்டனர். சமீபத்தில் நிலத்தைத் தோண்டியபோது, வீடியோ கேம்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மண்ணுக்குள் அழிந்தது போக, எஞ்சியுள்ள வீடியோ கேம்கள் விற்பனைக்கு வந்திருக்கின்றன. இவற்றின் மூலம் சுமார் 3 கோடி ரூபாய் வருமானம், 30 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்திருக்கிறது.

பழசுக்கு மரியாதை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x