

கலவரத்தைத் தடுப்பதில் இந்தியாவுக்கு ஏற்பட்ட தோல்வியின் முகமாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இருக்கிறார். அவரை பிரதமர் பதவிக்கான வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது வருத்தத்துக்கு உரியது என்று சர்வதேச மதச் சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையத்தின் உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
அந்த ஆணைய உறுப்பினர்கள் கத்ரினா லன்டோஸ் ஸ்வெட், மேரி ஆன் கிளென்டான் ஆகியோர் ஊடகம் ஒன்றின் வலைப்பூவில் எழுதிய கட்டுரையில் கூறியிருப்பதாவது: குஜராத்தைச் சேர்ந்த மகாத்மா காந்தி, பல மதங்கள் நிலவும் சமூகத்தில் சகிப்புத் தன்மையுடன் கூடிய தொலைநோக்குப் பார்வை, பரந்த மனப்பான்மைக்கு முக்கியத்துவம் அளித்தார்.
வரும் 2014-ம் ஆண்டு (மக்களவைப் பொதுத் தேர்தல்) இந்தியா எதற்கு முக்கியத்துவம் அளிக்கப்போகிறது? மதச் சுதந்திரத்திற்கா? மத சகிப்புத்தன்மையின்மைக்கா? காலம்தான் இதற்கு பதிலளிக்கும்.
கலவரத்தைத் தடுப்பதில் இந்தியாவுக்கு ஏற்பட்ட தோல்வியின் முகமாக நரேந்திர மோடி இருக்கிறார். 2002 குஜராத்தில் நிகழ்ந்த கலவரத்தின்போது அவர்தான் முதல்வராக இருந்தார்.
மோடி தலைமையிலான நிர்வாகம் சரியான நடவடிக்கை எடுக்காததை குஜராத் உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது. சேதப்படுத்தப்பட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு தகுந்த இழப்பீடுகளை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சர்வதேச மதச் சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று மோடிக்கு விசா வழங்குவதை விலக்கி வைக்க அமெரிக்க வெளியுறவுத்துறை 2005-ம் ஆண்டு ஒப்புக் கொண்டது.
மோடிக்கு விசா வழங்கக் கூடாது என்று இந்திய நாடாளுமன்றத்தைச் சேர்ந்த 65 உறுப்பினர்கள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இந்நிலையில் முக்கிய எதிர்க்கட்சியான பாஜக சார்பில் 2014-ம் ஆண்டில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவித்துள்ளது வருத்தம் தருவதாக உள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.