

சீனாவில் 64-வது தேசிய தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. அதிபர் ஜி ஜிங்பிங் உள்பட ஏராளமானவர்கள் தியானன்மென் சதுக்கத்தில் நினைவஞ்சலி செலுத்தினர்.
கடந்த 1839-ம் ஆண்டு தொடங்கிய முதல் ஓபியம் போரிலிருந்து, இறுதியாக 1949-ம் ஆண்டு நடைபெற்ற கம்யூனிஸப் புரட்சி வரை நாட்டுக்காகப் போராடி உயிர் நீத்தவர்களுக்கு தியானன் மென் சதுக்கத்தில் நினைவுத்தூண் வைக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் முதல் தேதி, சீனாவின் தேசிய தினமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சீன அதிபர் ஜி ஜிங்பிங், பிரதமர் லி கேகியாங், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பிரோ உறுப்பினர்கள் 25 பேர், தியானமென் சதுக்கத்தில் உள்ள நினைவுத்தூணில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
கொட்டும் மழையையும் பொருள்படுத்தாது மாணவர்கள், பொதுமக்கள் ஏராளமானவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
சீன தேசிய தினத்தை முன்னிட்டு, அங்கு 7 நாள்கள் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஜி ஜிங்பிங் ஆட்சிப் பொறுப்பே ற்ற பிறகு நடைபெறும் முதல் தேசிய தினக் கொண்டாட்டம் இதுவாகும்.
வளர்ச்சியே குறிக்கோள்
பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் பொருளாதார வளர்ச்சி முடுக்கிவிடப்படும் என ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். நடப்பாண்டின் 2-ம் காலாண்டில் சீனாவின் வளர்ச்சி விகிதம் 7.5 சதவீதமாக உள்ளது.
வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என சீனப் பிரதமர் லீ தெரிவித்துள்ளார்.
பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களை அமல்படுத்தி வருவதன் ஒருபடியாக சீனாவின் முதல் தாராள வர்த்தக மண்டலம் ஷாங்காயில் சில தினங்களுக்கு முன் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.