Published : 14 Jul 2016 03:59 PM
Last Updated : 14 Jul 2016 03:59 PM

காஷ்மீர் பிரச்சினையில் மீண்டும் அமைதிப் பேச்சு: இந்தியா, பாகிஸ்தானுக்கு ஐ.நா., அமெரிக்கா அறிவுரை

காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று ஐ.நா. சபையும் அமெரிக்காவும் அறிவுறுத்தியுள்ளன.

இதுகுறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூனின் செய்தித் தொடர்பாளர் ஸ்டானி துஜாரிக், நியூயார்க்கில் நிருபர்களிடம் கூறியதாவது:

காஷ்மீர் நிலவரத்தை ஐ.நா. சபை உன்னிப்பாக கவனித்து வருகிறது. அங்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் கவலை அளிக்கிறது. இந்த நேரத்தில் அனைத்துத் தரப்பினரும் அமைதி காக்க வேண்டுகிறோம்.

காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். இருநாடுகளுக்கும் இடையே சமரசத்தில் ஈடுபட ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூன் தயாராக உள்ளார். எனினும் இதுதொடர்பாக இரு நாடுகளும் முறையாக ஐ.நா. சபையை அணுக வேண்டும், என்றார் அவர்.

அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர், வாஷிங்டனில் நிருபர்களிடம் கூறியதாவது: காஷ்மீர் விவகாரத்தைப் பொறுத்தவரை இந்தியாவும் பாகிஸ்தானும் நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறோம். எங்களது இந்தக் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை, என்று கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியபோது, காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினை, அதில் அமெரிக்கா தலையிடாது என்று கூறியது நினைவுகூரத்தக்கது.

இதனிடையே, இந்திய சாலை, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தற்போது அமெரிக்காவில் முகாமிட்டுள்ளார். நியூயார்க்கில் நடந்த இந்திய-அமெரிக்க தொழிலதிபர்கள் மாநாட்டில் அவர் பேசியதாவது: பாகிஸ்தானுடன் நல்லுறவைப் பேண வேண்டும் என்றே இந்தியா விரும்புகிறது. ஆனால் அந்த நாடு இந்தியாவில் தீவிரவாதத்தை இறக்குமதி செய்து வருகிறது. இதுதான் பிரச்சினைக்கு மூலக் காரணம் என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x