

வடகொரியாவின் அணு ஆயுத திட்டத்துடன் தொடர்புடைய 15 தனி நபர்கள் மற்றும் 4 நிறுவனங்களுக்கு பொருளாதார தடை விதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனையை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதற்காக அந்த நாட்டின் மீது ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் ஏற்கெனவே 6 முறை பொருளாதார தடை விதித்தது.
இந்நிலையில் சமீபத்தில்கூட ஒரு ஏவுகணை சோதனையை நடத்தியது. இதையடுத்து, இந்த சோதனையுடன் தொடர்புடைய வெளிநாட்டு உளவுப் பிரிவு தலைவர் உட்பட 15 தனி நபர்கள் மற்றும் 4 நிறுவனங்களை பொருளாதார தடை பட்டியலில் சேர்க்க வகை செய்யும் தீர்மானம் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்டது. இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
சீனா கடும் எதிர்ப்பு
அதேநேரம் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானத்தில், வடகொரியா மீது மேலும் கடுமையான பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை இடம் பெற்றிருந்தது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வடகொரியா மீது புதிய தடை எதுவும் விதிக்கப்படவில்லை.
இதுதொடர்பான வாக்கெடுப்புக் குப் பிறகு ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே கூறும்போது, “வட கொரியர்கள் மீது தடை விதிக்கப்பட்டதன் மூலம் அந்த நாட்டுக்கு ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் தெளிவான செய்தியை தெரிவித்துள்ளது. எனவே, ஏவுகணை சோதனை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்றார்.
தடை விதிக்கப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய முடியாது. மேலும் அவர்களது சொத்துகள் முடக்கப்படும். வட கொரியாவைச் சேர்ந்த 39 தனிநபர்கள் மற்றும் 42 நிறுவனங்களுக்கு ஏற்கெனவே இத்தகைய தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.