

அமெரிக்காவில் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்காக வழங்கப்படும் அதிபர் விருதுக்கு (பிஇசிஏஎஸ்இ) 4 இந்திய-அமெரிக்க விஞ்ஞானிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் தனிப்பட்ட ஆராய்ச்சியில் (தொடக்க நிலை) ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளில் சிறந்து விளங்குபவர்களை ஆண்டுதோறும் தேர்வு செய்து இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருதுக்கு மொத்தம் 102 விஞ்ஞானிகளை அதிபர் ஒபாமா தேர்வு செய்துள்ளார்.
இதில் மான்ட்க்ளேர் ஸ்டேட் யுனிவர்சிட்டியைச் சேர்ந்த பங்கஜ் லால், நார்த்ஈஸ்டர்ன் யுனிவர் சிட்டியின் கவுசிக் சவுத்ரி, இகான் ஸ்கூல் ஆப் மெடிசினைச் சேர்ந்த மணீஷ் அரோரா, யுனிவர்சிட்டி ஆப் கலிபோர்னியாவின் ஆராத்னா திரிபாதி ஆகிய 4 பேர் இந்தியர்கள் ஆவர்.
இதுகுறித்து ஒபாமா கூறும் போது, “அதிபர் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள விஞ்ஞானிகள், பொறியாளர்களுக்கு வாழ்த்துகள். இவர்களது ஆராய்ச்சி இந்த நாட்டின் பெருமையை உலகுக்கு பறைசாற்ற உதவுவதுடன் பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கிய பங்கு வகிக்கும்” என்றார்.
கடந்த 1996-ம் ஆண்டு அப்போதைய அதிபர் பில் கிளின்டனால் இந்த விருது நிறுவப்பட்டது. பல்வேறு துறை களில் புதுமையை புகுத்தவும் முக்கிய சவால்களைச் சமாளிக் கவும் உதவும் ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதற்காக இந்த விருது உருவாக்கப்பட்டது.