Last Updated : 25 Jan, 2017 11:03 AM

 

Published : 25 Jan 2017 11:03 AM
Last Updated : 25 Jan 2017 11:03 AM

அமெரிக்காவின் உண்மையான நண்பன் இந்தியா: ட்ரம்ப்

அமெரிக்காவின் உண்மையான நண்பன் இந்தியா என்றும், உலகிலுள்ள சவால்களை இணைந்து எதிர்கொள்ளும் பங்குதாரர் என்றும் மோடியுடனான தொலைபேசி உரையாடலில் அதிபர் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொலைபேசி வாயிலாக இந்திய பிரதமர் மோடியுடன் செவ்வாய்க்கிழமை உரையாடினார். இந்த உரையாடலில் இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவு, தீவிரவாததுக்கு எதிரான நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகையிலிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

மோடி - ட்ரம்ப் இடையான தொலைபேசி உரையாடல் குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், "அதிபர் ட்ரம்ப் - இந்தியப் பிரதமர் மோடி இடையேயான உரையாடலின்போது இரு தலைவர்களும் பரஸ்பரம் தங்கள் நாட்டுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தனர்.

இரு நாடுகளின் நட்புறவை பலப்படுத்துவது குறித்தும், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாகவும் ஆலோசனையில் ஈடுபட்டனர். மேலும் இந்த உரையாடலில் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவின் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

அதிபர் ட்ரம்ப் இந்த வருடத்தின் இறுதியில் இந்திய பிரதமர் மோடியை அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் தொலைபேசியில் உரையாடியது குறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடனான உரையாடல் இனிமையானதாக இருந்தது. ட்ரம்ப் இந்தியாவுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது" என்று பதிவிட்டுள்ளார்.

டொனால்டு ட்ரம்ப் ஜனவரி 20-ம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்றபோது, தொலைபேசி வாயிலாக ட்ரம்ப்புக்கு வாழ்த்து தெரிவித்த தலைவர்களுள் மோடியும் ஒருவர்.

அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தின்போது ட்ரம்ப், "இந்தியா- அமெரிக்க நாடுகளின் நட்புறவு எனது ஆட்சிக் காலத்தில் மேலும் நெருக்கமாக இருக்கப் போகிறது. இரு நாடுகளும் இணைந்து பணியாற்றி, சிறப்பான எதிர்காலத்தைப் பெற போகின்றன. " என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x