பிரிட்டனில் தொங்கு நாடாளுமன்றம் உறுதியானது: கன்சர்வேடிவ் 318; தொழிலாளர் கட்சி 261

பிரிட்டனில் தொங்கு நாடாளுமன்றம் உறுதியானது: கன்சர்வேடிவ் 318; தொழிலாளர் கட்சி 261
Updated on
2 min read

பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை முதல் நடைபெற்று வருகிறது.

பெரும்பான்மைக்கு 326 இடங்கள் தேவைப்படும் நிலையில் இருபெருங் கட்சிகளும் அந்த எண்ணிக்கையை எட்டாததால் தொங்கு நாடாளுமன்றம் அமைவது உறுதியாகிவிட்டது.

தற்போதைய நிலவரப்படி, கன்சர்வேடிவ் கட்சி 318 இடங்களையும், தொழிலாளர் கட்சி 261 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

ராணியை சந்திக்கத் திட்டம்:

தொங்கு நாடாளுமன்றம் அமைவது உறுதியாகிவிட்ட நிலையில் இங்கிலாந்து ராணியை சந்திக்க தெரசா மே முடிவு செய்துள்ளார். கூட்டணி ஆட்சி அமைக்கும் முயற்சியில் தெரசா மே இறங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தவறிய கணக்கு:

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை பலம் தேவை. எனவே முன் கூட்டியே தேர்தல் நடத்த பிரதமர் தெரசா முன்மொழிந்தார். அதற்கு நாடாளுமன்றமும் ஒப்புதல் அளித்தது. பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க தேர்தலை எதிர்கொண்ட தெரசா மே தற்போது பெரும்பான்மையை இழந்து நிற்கிறார்.

இந்நிலையில் தெரசா மே-வில் கன்சர்வேடிவ் கட்சிக்கு இரண்டு வாய்ப்புகள் மட்டுமே இப்போது இருக்கின்றன. ஒன்று, வேறு ஒரு கட்சியின் ஆதரவைப் பெற்று கூட்டணி ஆட்சியை அவர் அமைக்க வேண்டும். இல்லையேல் தொழிலாளர் கட்சியின் ஜெரமி கார்பினின் சிறுபான்மை அரசுக்கு வழிவிட வேண்டும். ஸ்காட்லாந்து தேசிய கட்சி 35 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஒருவேளை இக்கட்சியின் ஆதரவை தெரசா மே பெற்றால் பிரிட்டனில் கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பிருக்கிறது.

எதற்காக தேர்தல் நடத்தப்பட்டது?

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகியவை அடங்கிய பிரிட்டிஷ் நாடாளுமன்றத்துக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது.

கடந்த 2015 மே மாதம் நடந்த தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றி பெற்று டேவிட் கேமரூன் பிரதமராகப் பொறுப் பேற்றார். பிரெக்ஸிட் விவகாரம் காரணமாக அவர் பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 2016 ஜூலை 13-ல் தெரசா மே பிரதமராகப் பதவியேற்றார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை பலம் தேவை. எனவே முன் கூட்டியே தேர்தல் நடத்த பிரதமர் தெரசா முன்மொழிந்தார். அதற்கு நாடாளுமன்றமும் ஒப்புதல் அளித்தது.

ஏற்கெனவே அறிவித்தபடி 650 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்துக்கு நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 4.6 கோடி பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். அவர்களில் இந்திய வம்சாவளியினர் 15 லட்சம் பேர் உள்ளனர்.

ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் தெரசா மே பிரதமர் வேட்பாளராக போட்டியிட்டார். எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி சார்பில் அதன் தலைவர் ஜெரமி கார்பின் பிரதமர் வேட்பாளராக களம் கண்டார்.

இந்திய நேரப்படி நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு வரை விறுவிறுப்பாக வாக்குப் பதிவு நடைபெற்றது. இன்று அதிகாலை முதல் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

தேர்தல் முடிவு நிலவரம்:

மொத்தம் 650 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் தற்போது வரை 649 இடங்களுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் ஜெர்மி கார்பைனின் தொழிலாளர் கட்சி 261 இடங்களையும் பிரதமர் தெரசா மே-வின் கன்சர்வேடிவ் கட்சி 318 இடங்களை கைப்பற்றியிருக்கிறது. அடுத்தபடியாக ஸ்காட்டிஷ் நேஷனல் கட்சி 35 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

பெரும்பான்மைக்கு 326 இடங்கள் தேவை.

கட்சி

வெற்றி நிலவரம்

மொத்த தொகுதிகள்

கன்சர்வேடிவ்

318

650

தொழிலாளர்

261

650

ஸ்காட்டிஷ் தேசிய கட்சி

35

650

லிப் டெம்

12

650

தலைநகர் லண்டன் மற்றும் மான்செஸ்டரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களும், இந்தத் தேர்தலில், ஆளும் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கருத்துக் கணிப்பு முடிவுகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in