

மாலத்தீவுகளில் அதிபர் பதவிக்கான இரண்டாம் சுற்று தேர்தல் சனிக்கிழமை நடைபெற உள்ள நிலையில், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக, அந்நாட்டு அதிபர் முகமது வாஹீத் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
மாலத்தீவில் ஜனநாயக முறைப்படி முதன்முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது நஷீத், எதிர்க்கட்சிகளின் நிர்ப்பந்தம் காரணமாக கடந்த 2012 பிப்ரவரியில் பதவி விலகினார். இதையடுத்து முகமது வாஹீத் அதிபரானார். இவரது பதவிக்காலம் நவம்பர் 10-ம் தேதியுடன் முடிந்தபோதும் பதவி விலக மறுத்து வந்தார்.
இந்நிலையில், வாஹீத் உடனடியாக பதவி விலக வேண்டும் என இந்தியா மற்றும் மேற்கத்திய நாடுகள் வலியுறுத்தின. இதையடுத்து அவர் பதவி விலகி உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, தென்கிழக்கு ஆசிய நாடு ஒன்றுக்கு தனிப்பட்ட பயணமாக வியாழக்கிழமை மாலை வாஹீத் புறப்பட்டுச் சென்றதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. முன்னதாக, அதிபர் தேர்தல் முடியும்வரை பதவியில் தொடர விரும்பினார் வாஹீத்.
வியாழக்கிழமை இரவு தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய வாஹீத், "வெளிநாட்டு நிர்ப்பந்தங்களுக்கு அரசு அடிபணியாமல் சட்டத்தையும் சட்டப்படி நிறுவப்பட்ட அமைப்புகளின் உத்தரவுகளையும் செயல்படுத்தி உள்ளேன்" என்றார்.
இன்று 2-ம் சுற்று தேர்தல்
மாலத்தீவுகளில் அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த 9-ம் தேதி நடைபெற்றது. இதில், வெற்றி பெறுவதற்கான வாக்குகளை யாரும் பெறாததால், இரண்டாம் சுற்று தேர்தல் சனிக்கிழமை நடைபெறுகிறது. முதல் சுற்றில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த முன்னாள் அதிபர் நஷீத் மற்றும் அப்துல்லா யமீன் ஆகியோருக்கிடையே போட்டி நிலவுகிறது.
கடந்த மூன்று மாதங்களில் அதிபர் பதவிக்கான தேர்தல் மூன்றாவது முறையாக நடைபெறுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அந்தத் தேர்தல் செல்லாது என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.