

கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள பெருவணிக வளாகத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் இரு இந்தியர்கள் உள்பட 43 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
நைரோபியில் உள்ள வெஸ்ட் கேட் பெருவணிக வளாகத்துக்குள் சோமாலியாவின் அல் ஷபாப் இயக்கத்தைச் சேர்ந்த முகமூடி அணிந்த 10 பயங்கரவாதிகள், சனிக்கிழமை மதியம் புகுந்தனர். அப்போது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அந்த வணிக வளாகத்துக்குள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
கண்ணில் பட்டவர்களை எல்லாம் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். குறிப்பாக, முஸ்லிம் அல்லாதோரை குறிவைத்து அவர்கள் தாக்குதல் நடத்தியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். அங்கிருந்த முஸ்லிம்களை வெளியேற அனுமதித்த பயங்கரவாதிகள், பிற மதத்தினரை பிணைக் கைதிகளாகப் பிடித்துவைத்ததாகக் கூறப்படுகிறது. இத்தாக்குதலில் தென்கொரியா, சீனாவைச் சேர்ந்த தலா ஒருவர், இந்தியா, பிரான்ஸ், கனடாவைச் சேர்ந்த தலா 2 பேர் உள்பட 43 பேர் கொல்லப்பட்டனர். மேலும் சிலர் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
தகவலறிந்த பாதுகாப்புப் படையினர், உடனடியாக வணிக வளாகத்தை சுற்றி வளைத்தனர். இருதப்புக்கும் இடையே 24 மணி நேரத்துக்கும் மேலாக துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது.
வணிக வளாகத்தின் மாடிப் பகுதிகள் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதைத் தெரிவித்த கென்ய பேரிடர் மீட்பு மையம், பிணைக் கைதிகளை விடுவிக்க தொடர்ந்து முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளது. கட்டடத்தின் தரைத்தளத்தில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளுடன், பாதுகாப்புப் படையினர் ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர்.
இந்த தாக்குதல் குறித்து அதிபர் உகுரு கென்யாட்டா கூறுகையில், “இந்தச் சம்பவத்தில் எனது நெருங்கிய உறவினர்கள் சிலரை இழந்துவிட்டேன். இது ஒரு கோழைத்தனமான தாக்குதல். பாதுகாப்புப் படையினர் துரிதமாக செயல்பட்டு வணிக வளாகத்தில் சிக்கியிருந்த நூற்றுக்கணக்கானோரை பத்திரமாக மீட்டனர். பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளவர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்றார்.
இந்த தாக்குதலுக்கு அல் காய்தா பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய அல் சபாப் பயங்கரவாதிகள் குழு பொறுப்பேற்றுள்ளது. சோமாலியாவில் ஆப்பிரிக்க யூனியன் பாதுகாப்புப் படையினருடன் இணைந்து அல் ஷபாப் இயக்கத்துக்கு எதிராக கென்ய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கென்ய படையினர் உடனடியாக சோமாலியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று பலமுறை எச்சரித்தும், அவர்கள் வெளியேறவில்லை. அதை கண்டித்து இத்தாக்குதலை நடத்தியுள்ளோம் என்று பயங்கரவாத அமைப்பு சார்பில் டுவிட்டர் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் அமெரிக்காவைச் சேர்ந்த இருவர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக தங்களுக்கு கூடுதல் தகவல்கள் எதுவும் வரவில்லை என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பயங்கரவாதிகளின் செயலைக் கண்டிப்பதாகவும், அவர்களை ஒடுக்க கென்யா அரசுக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாகவும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித்தொடர்பாளர் ஹெய்டன் தெரிவித்தார்.
பிணைக் கைதிகளாக பிரிட்டனைச் சேர்ந்த சிலரை பயங்கரவாதிகள் பிடித்து வைத்துள்ளதை அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் கூறுகையில், “பிணைக் கைதிகளை மீட்பது தொடர்பாக அரசின் நெருக்கடி கால குழு கூடி ஆலோசனை நடத்தி வருகிறது. சிறப்பு தூதர் குழு ஒன்றும் கென்யாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது” என்றார்.
பயங்கரவாதிகளின் இந்த செயலுக்கு பிரான்ஸ் அதிபர் பிரான்ஷுவா ஹொலாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். அப்பாவி மக்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் பான் கீ-மூன் கண்டித்துள்ளார். குற்றவாளிகள் அனைவரும் நீதியின் முன்பு நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார். முன்னதாக கென்ய அதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து அவர் கேட்டறிந்தார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலக அமைதி, பாதுகாப்புக்கு பயங்கரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இதுபோன்ற தாக்குதல்களை நியாயப்படுத்த முடியாது என்று தெரிவி்த்துள்ளது.