

இளைஞர்கள் அதிகம் வாழும் நாடுகள் வரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
இதுகுறித்து ஐ.நாசபை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை யில் கூறியிருப்பதாவது: உலகம் முழுவதும் 10 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்ட 180 கோடி இளைஞர்கள் உள்ளனர். இதில் இந்தியாவில் மட்டும் 35.6 கோடி இளைஞர்கள் உள்ளனர். இது இந்திய மக்கள் தொகையில் 28 சதவீதம் ஆகும்.
அதற்கு அடுத்து சீனாவில் 26.9 கோடி, இந்தோனேசியாவில் 6.7 கோடி, அமெரிக்காவில் 6.5 கோடி, பாகிஸ்தானில் 5.9 கோடி, நைஜீரியாவில் 5.7 கோடி, பிரேசிலில் 5.1 கோடி, வங்கதேசத்தில் 4.8 கோடி இளைஞர்கள் உள்ளனர்.
உலகில் இதற்கு முன்பு இல்லாத வகையில் இளைஞர்களின் தொகை கணிசமாக அதிகரித்துள்ளது. இது பொருளாதார, சமூக வளர்ச்சிக்கு நிச்சயமாக வித்திடும். இளைஞர்களின் சக்தியை வளரும் நாடுகள் ஆக்கபூர்வமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உலக இளைஞர்களில் 89 சதவீதம் பேர் வளரும் நாடுகளில்தான் உள்ளனர்.
உலகம் முழுவதும் 10 முதல் 19 வயதுக்கு உள்பட்ட 20 லட்சம் இளைஞர்கள் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர 2012-ம் ஆண்டில் மட்டும் பல்வேறு நோய்களால் 13 லட்சம் இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
எனவே இளைஞர்களின் நலனில் உலக நாடுகள் அதிக அக்கறை காட்ட வேண்டும். குறிப்பாக இளம்பெண்களின் ஆரோக்கியம், சுகாதாரத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
பாலியல் துன்புறுத்தல், இளம்வயது திருமணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் இளம்பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இதுதொடர்பாக இளையோர் மத்தியில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதற்கு இடையூறாக சில நாடுகளில் பாலியல் கல்விக்கு எதிர்ப்பு இருப்பது துரதிஷ்டவசமானது.
வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு
சர்வதேச பொருளாதாரம் மந்த மான நிலையில் இருப்பதால் வேலைவாய்ப்பின்மை பிரச்சினை பல்வேறு நாடுகளில் அதிகரித்துள்ளது.
பின்தங்கிய நாடுகளில் 60 சதவீத இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி தவிக்கின்றனர்.
சுமார் 50 கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்கள் நாளொன்றுக்கு ரூ.120 மட்டுமே ஊதியமாகப் பெறுகின்றனர். அவர்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.