இலங்கை வடக்கு மாகாணத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மகத்தான வெற்றி

இலங்கை வடக்கு மாகாணத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மகத்தான வெற்றி
Updated on
1 min read

இலங்கையின் வடக்கு மாகாணத் தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மகத்தான வெற்றி பெற்றுள்ளது. அதிபர் ராஜபக்‌ஷேவின் ஆளும் மக்கள் சுதந்திர கூட்டணி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

வடக்கு மகாணத் தேர்தல் முடிவின்படி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு 5 மாவட்டங்களிலும் அமோக வெற்றி பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் 14 இடங்களையும், முல்லைத்தீவில் 4 இடங்களையும், கிளிநொச்சியில் 3 இடங்களையும், வவுனியாவில் 4 இடங்களையும், மன்னாரில் 3 இடங்களையும் கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொத்தமுள்ள 38 இடங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 30 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஆளும் மக்கள் சுதந்திர கூட்டணி 7 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

சர்வதேச அளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இலங்கை வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் 25 ஆண்டுகளுக்குப் பிறகு சனிக்கிழமை நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு முடிந்தது. இந்த மாகாணத்தில் 70 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. வாக்கு எண்ணும் பணி இரவு 7 மணிக்கு மேல் தொடங்கியது.

வடக்கு மாகாணத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு இடையே நேரடி போட்டி நிலவியது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் முக்கிய தமிழ்க் கட்சியான ஈபிடிபி கட்சி, இலங்கை சுதந்திர கட்சி, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆகியவை உள்ளன. அரசில் அங்கம் வகிக்கும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி ஆகியவை தனித்துப் போட்டியிட்டன.

2009-ல் நடந்த இறுதி கட்டப்போரில் விடுதலைப்புலிகளை பாதுகாப்புப்படை தோற்கடித்த பின் 4 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த இந்தத் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் நடைபெற்றது. முறை கேடுகளுக்கோ வன்முறைக்கோ இடம் தராமல் தேர்தல் நடந்ததா என்பதை கண்காணிக்கும் பணியில் உள்நாட்டு, வெளிநாட்டுப் பார்வையாளர்கள் என சுமார் 2000 பேர் ஈடுபட்டனர்.

தெற்காசிய நாடுகளின் பார்வையாளர் குழுவும் இந்திய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபாலசாமி தலைமையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.

இந்தியா உட்பட அனைத்து சர்வதேச சமுதாயமும் வரலாற்று முக்கியத்துவம் வாயந்த இந்த தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்ததும், இந்தத் தேர்தல் சுயாட்சிக்கு வழி செய்யும் என மாகாண மக்கள் நம்புவதும் கவனத்துக்குரியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in