

அமெரிக்காவில் எம்.பி.க்கள் பங்கேற்ற விளையாட்டு பயிற்சியின்போது மர்ம நபர் நேற்று துப்பாக்கியால் சுட்டதில் குடியரசு கட்சியைச் சேர்ந்த மூத்த எம்.பி. ஸ்டீவ் ஸ்காலைஸ் உட்பட 5 பேர் காயமடைந்தனர்.
விர்ஜினியா மாகாணத்தில் உள்ள அலெக்ஸாண்ட்ரியாவில் நேற்று அரசியல்வாதிகளுக்கான பேஸ்பால் விளையாட்டுப் பயிற்சி முகாம் நடந்தது. இதில் குடியரசுக் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் பலர் பங்கேற்றனர். அப்போது பயிற்சி முகாமுக்குள் புகுந்த மர்ம நபர் திடீரென தன்னிடம் இருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டார். இதனால் பீதியடைந்த எம்.பி.க்கள் அங்குமிங்கும் ஓடினர். மூத்த எம்.பி.யான ஸ்டீவ் ஸ்காலைஸ் மீது குண்டு பாய்ந்ததில் அவர் படுகாயமடைந்தார். உடனடியாக ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் சக எம்.பி.க்கள் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் இரு அதிகாரிகள் உட்பட மேலும் சிலர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தை நேரில் பார்த்த கேட்டி பிளோஸ் என்ற பெண் கூறும்போது, ‘’20-க்கும் மேற்பட்ட முறை துப்பாக்கி குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டது. துப்பாக்கியால் சுட்டவர் போலீஸ் அதிகாரி ஒருவரையும் தாக்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். அந்த அதிகாரிதான் முதலில் அந்த மர்ம நபரைப் பார்த்தார். கையில் துப்பாக்கி வைத்திருந்ததைக் கண்டதும் கூச்சலிட்டார். இதனால் அந்த அதிகாரியை மர்ம நபர் தாக்கினார்’’ என்றார்.
துப்பாக்கிச் சூடு நடந்ததை அடுத்து போலீஸாரும், பாதுகாப்புப் படையினரும் அந்த மர்ம நபரை சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர். இதன்பிறகே அங்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் நீங்கியது.
இதற்கிடையே துப்பாக்கித் தாக்குதல் சம்பவத்தை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்ததாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்ரம்ப் வெளியிட்ட அறிக்கையில், ‘‘துணை அதிபரும், நானும் சம்பவத்தைக் கேள்விப்பட்டு வேதனை அடைந்தோம். நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். காயமடைந்த எம்.பி.க்கள், அவர்களது உதவியாளர்கள், போலீஸ் அதிகாரிகள் ஆகியோர் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்திக்கிறோம்’’ என குறிப்பிட்டுள்ளார்.