

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பேசியபோது பொதுமக்கள் பலர் அவரை சுற்றி வளைத்து கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது சொந்த ஊரான சிகாகோ சென்றுள்ள ஒபாமா, நேற்று குடியுரிமை சீர்திருத்தம் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் பேசினார். சிகாகோவில் உள்ள சமூகநல கூடத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில் நடுவில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்று ஒபாமா பேசினார். அவரைச் சுற்றி பொதுமக்கள் கூடியிருந்தனர்.
மீண்டும் சிகாகோ நகருக்கு வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறி ஒபாமா தனது பேச்சை தொடங்கினார். அப்போது பொதுமக்களில் பலர் கைதட்டி அதனை வரவேற்றனர். அப்போது அவரது பேச்சில் குறுக்கிடும் வகையில் ஒருவர் எழுந்து கேள்வி எழுப்பினார். அவர் பேசியது யாருக்கும் கேட்கவில்லை. எனினும் அவரை அமை திப்படுத்தும் வகையில் பேசிய ஒபாமா, அனைவருக்குமே தனிப்பட்ட கருத்துகள் உண்டு.
ஆனால் நேரம் இல்லாத காரணத்தால் அனைவரது கருத்தையும் நான் தனித்தனியாக கேட்க முடியாது என்றார். இதைத் தொடர்ந்து குடியுரிமை சீர்திருத்தம் தொடர்பாக அவர் மேலும் பேச முயன்றார். அப்போது இளம்பெண் ஒருவர் கையில் பேனரை ஏந்தியபடி ஒபாமாவை நோக்கி கேள்வி எழுப்பினார். “மக்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதை நிறுத்துங் கள்.. ஒபாமா.” என்று அவரது கையில் இருந்த பேனரில் எழுதப்பட்டிருந்தது.
இதையடுத்து மேலும் இருவர் எழுந்து ஒபாமாவை பேசவிடாமல் குறுக்கிட்டு கூச்சலிட்டனர். யாரையும் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றக் கூடாது என்று அவர்கள் கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து நிலைமை மோசமடைவதை உணர்ந்த ஒபாமா, சரி நீங்கள் கூறுவதை நான் கேட்கிறேன். சிறிது நேரம் அமைதியாக இருங்கள். இந்த இடத்தில் இருந்து உங்களை யாரும் வெளியேற்றமாட்டார்கள். உங்கள் கருத்துகளை நான் கேட்கிறேன் என்று பல முறை கேட்டுக் கொண்டார். இதையடுத்து கூட்டத்தில் சற்று அமைதி திரும்பியது.
இதைத் தொடர்ந்து பேசிய ஒபாமா, உரிய ஆவணங்களின்றி அமெரிக்காவில் தங்கியிருக்கும் தொழிலாளர்களால் நமது குடியுரிமை சட்டங்கள் மீறப்பட்டுள்ளன. இந்த விதிமீறல்களுக்கு அதில் தொடர்புடைய நபர்கள்தான் பொறுப்பு. சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களால் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் எண்ணிக்கை கடந்த 6 ஆண்டுகளில் 80 சதவீதம் அதிகரித் துள்ளது. இவர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேற்றப் பட்டுள்ளனர் என்றார். முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு குடியேற்ற சீர்திருத்தத்தை ஒபாமா அறிவித்தார்.
அதில், அமெரிக்காவில் வெளிநாட்டில் உள்ளவர்கள் குடியேற்ற உரிமை பெறுவதில் உள்ள பிரச்சினை களை சுமூகமாக தீர்க்க திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் அமெரிக்காவில் தங்கியுள்ள ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பயனடைய வாய்ப்பு ஏற்பட்டது. அதே நேரத்தில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருக்கும் சுமார் ஒரு கோடி பேரை நாட்டை விட்டு வெளியேற்றவும் குடியுரிமை சீர்திருத்தம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.