

அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்படுகிறது. இந்த பரிசினை பெறுவதற்காக 259 நபர்கள் பெயரும், தவிர உலகம் முழுவதும் இருந்து 50 தொண்டு நிறுவனங்களும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப்சாயி-க்கே இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
யார் இந்த மலாலா?
பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதியைச் சேர்ந்தவர் மலாலா (16). தனது பகுதியில் பள்ளிக்கூடம் செல்லாமல் இருந்த பெண்களிடம் படிப்பபின் அருமைபற்றி எடுத்துக் கூறி கல்விப் பணியாற்றியவர். பெண்கள் படிப்பதை விரும்பாத தலிபான்கள் மலாலா மீது துப்பாக்கி தாக்குதல் நடத்தினர். தலிபான்களால் சுடப்பட்டதில் காயம் அடைந்த மலாலா பிரிட்டனில் தீவிர சிகிச்சைக்குப் பின்னர் உயிர் பிழைத்தார். தலிபான்களுக்கு அஞ்சாமல் தொடர்ந்து, பெண் கல்விக்காக போரடுவேன் என்று அறிவித்தார்.
’நான்தான் மலாலா: தலிபான்களால் சுடப்பட்ட பெண்’ என்ற தலைப்பில் மலாலா யூசுப்சாயி சுயசரிதை எழுதியுள்ளார். அது அண்மையில் வெளியானது. மலாலாவை கௌரவித்து, ஜூலை 14ம் தேதியை உலக மலாலா தினமாக ஐநா அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.