Published : 22 Mar 2014 12:00 AM
Last Updated : 22 Mar 2014 12:00 AM

கிழக்குப் பகுதி மீது ரஷ்யா கைவைத்தால் ராணுவ நடவடிக்கை எடுப்போம்: உக்ரைன் பிரதமர் எச்சரிக்கை

உக்ரைனின் கிழக்குப் பகுதியை ரஷ்யா இணைத்துக் கொள்ள நினைத்தால், ராணுவ ரீதியாக தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று உக்ரைன் பிரதமர் அர்செனி யாட்செனியுக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அர்செனி யாட்செனியுக் கூறியதாவது: உக்ரைன் எல்லையை கடந்து கிழக்கு பகுதியை தனது ஆதிக்கத்துக்குள் கொண்டு வர ரஷ்யா முயற்சித்தால், ராணுவ ரீதியாக நடவடிக்கை எடுப்போம். சுதந்திரமான பக்கத்து நாட்டின் மீது துப்பாக்கியுடன் புகுந்து கொள்ளையடிக்கும் செயலில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது” என்றார்

3 போர் கப்பல்கள்

கிரைமியாவில் உக்ரைன் கடற்படை கமாண்டர் ஒருவரை பிடித்து வைத்திருந்த ரஷ்ய ஆதரவுப் படையினர், அவரை விடுவித்தனர். எனினும், அப்பகுதியில் பதற்றம் குறையவில்லை. உக்ரைனுக்கு சொந்தமான 3 போர்க் கப்பல்களை ரஷ்ய படையினர் வெள்ளிக்கிழமை கைப்பற்றினர். ராணுவ தளங்களில் புகுந்து உக்ரைன் படையினரை தாக்க ரஷ்ய வீரர்கள் முயற்சித்து வருவதாக உக்ரைன் பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் லியோனிட் பாலியாகோவ் கூறினார்.

ரஷ்யா மீது மேலும் சில பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. நிலைமையில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படாமல் கிரைமியாவில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு தொடர்ந்தால், மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஒபாமா எச்சரித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னே கூறும்போது, “காலம் கடந்து விட வில்லை. ரஷ்யா இப்போது முயற்சித்தாலும் இப்பிரச்சினைக்கு சுமுகமாகத் தீர்வு காண முடியும். உக்ரைனின் இறையாண்மை பாதிக்கப்படாத வகையிலும், சர்வதேச சட்டத்துக்கு உட்பட்டும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும்” என்றார்.

இதற்கிடையே மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் பான் கி மூன் சந்தித்து பேசினார். இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று புதினிடம் கூறியதாக பான் கி மூன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x