

சேதி கேட்டோ
பலமுனைப் போரில் பரிதவித்துக்கொண்டிருக்கும் சிரியாவில் செய்தி சேகரிக்க ஆளில்லை. இதுவரை 110 செய்தியாளர்கள் கொல்லப்பட்டிருப்பதால், செய்தியாளர்களை அனுப்ப பெரிய ஊடகங்கள் மறுக்கின்றன. உள்ளூர் செய்தியாளர்கள்தான் உயிரைப் பணயம் வைத்து செய்திகளைச் சேகரிக்கின்றனர். முறையான சம்பளமும் இல்லை; கடத்தப்பட்டால் அவர்களுக்காகப் பேச யாரும் இல்லை. உலகத்தின் பார்வையிலிருந்து மெல்ல மறைந்துகொண்டிருக்கிறது சிரியா!
*
கடந்தகாலக் கலை
பாகிஸ்தானின் ஸ்வாத் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள பாரிகோட்டில் இந்தோ-கிரேக்க நகரத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் அகழ்வாராய்ச்சியாளர்கள். கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த நாணயங்கள், ஆயுதங்கள், கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த கலைப் பொருட்கள் கிடைத்திருக்கின்றன. இவை கிரீக் பாட்ரிஷியா மற்றும் மத்தியத் தரைக்கடல் பகுதியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. கி.பி. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த, நான்கு தூண்களுடன் கூடிய குஷானக் கோயிலும் கண்டிபிடிக்கப்பட்டிருக்கிறது.
*
நெகிழ்ச்சியூட்டும் நேசம்
வங்கதேசத்தில் முஸ்லிம்களுக்கும் புத்த மதத்தினருக்கும் இடையில் அவ்வப்போது கலவரம் வெடிப்பதும் உயிர்கள் பறிபோவதும் சகஜமான செய்திகள். டாக்காவின் தர்மராஜிகா பௌத்த மடாலயம் தன்னாலான அளவுக்கு சூழலை மாற்ற நினைக்கிறது. தினமும் மாலை 5.30 மணிக்கு இப்தார் நோன்பு துறப்பு விருந்து கொடுக்கும் துறவி புத்தப்ரியா மகாதெரோ, மியான்மரில் முஸ்லிம்கள் மீது பௌத்தர்கள் நடத்தும் தாக்குதல்களையும் கடுமையாகக் கண்டிக்கிறார்.
*
‘கள்ளநோட்டு’ கவர்மென்ட்!
பொருளாதாரம் காலியான ஜிம்பாப்வேயில் 2009 முதல் அமெரிக்க டாலர்கள் புழக்கத்தில் இருக்கிறது. இந்நிலையில், பதுக்கல், கடத்தல் என்று பல்வேறு காரணங்களால் டாலர் நோட்டுக்கள் குறைந்துவிட்டன. ஏடிஎம் முதற்கொண்டு எங்குமே கரன்ஸியைக் காண முடியவில்லை. பார்த்தது அரசு. அமெரிக்க டாலர் போலவே தோற்றமளிக்கும் அதிகாரபூர்வப் போலி நோட்டுகளை விநியோகிக்க இப்போது தீர்மானித்துவிட்டது. அரசாங்கமே இப்படின்னா?
*
அகண்ட பனாமா!
அட்லாண்டிக் பெருங்கடலையும், பசிபிக் பெருங்கடலையும் இணைக்கும் பனாமா கால்வாய் கிட்டத்தட்ட 102 ஆண்டுகளுக்கு முன்னர் பயன்பாட்டுக்கு வந்தது. தற்போது அது விரிவாக்கப்பட்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக, 40,000 தொழிலாளர்களின் உழைப்பில் ரூ. 37 ஆயிரம் கோடியில் விரிவாக்கப்பட்டிருக்கும் புதிய கால்வாயில் ஞாயிற்றுக்கிழமை முதலில் கடந்துசென்றது ஒரு சீன சரக்குக் கப்பல்!
*
கண்டுகொள்ளப்படாத கண்ணீர்
போதைமருந்து கடத்தலுக்குப் பேர்போன மெக்ஸிகோவில், கைது கணக்கு காட்ட அப்பாவிப் பெண்கள் சித்திரவதை செய்யப்படுகிறார்கள். எந்தக் குற்றமும் செய்யாத பெண்கள் கைதுசெய்யப்பட்டு பாலியல் ரீதியான சித்திரவதைகளுக்கு ஆளாவதாகக் கூறுகிறது ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு. ராணுவம், கப்பல் படை என்று பல்வேறு தரப்பினரும் இந்த அத்துமீறலில் ஈடுபடுவதாகவும், அரசு இதைக் கண்டுகொள்ளவில்லை என்றும் குற்றம்சாட்டியிருக்கிறது ஆம்னெஸ்டி!