

அடுத்த ஆண்டு சர்வதேச யோகா தினத்தையொட்டி அஞ்சல் தலை வெளியிட ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா) திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து ஐ.நா.வின் அஞ்சல் முகமையான யு.என்.பி.ஏ. (ஐ.நா. அஞ்சல் நிர்வாகம்), ட்விட்டர் சமூக வலைதளத்தில் விடுத்துள்ள செய்தியில், “சர்வதேச யோகா தினம் கொண்டாடி வரும் ஐ.நா., வரும் 2017-ல் இத்தலைப்பில் அஞ்சல் தலை வெளியிட திட்ட மிட்டுள்ளது” என்று கூறப்பட்டுள் ளது.
இந்த அஞ்சல் தலை நியூயார்க், ஜெனீவா, வியன்னா ஆகிய நகரங்களில் உள்ள ஐ.நா. அலுவலகங்களில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட உள்ளது. இந்த மூன்று வெளியீட்டிலும் வடிவமைப்பு கருப்பொருள் ஒன்றாகவும் மதிப்பு (விலை) வெவ்வேறாகவும் இருக்கும். இந்த அஞ்சல் தலை ஓராண்டுக்கு விற்பனையில் இருக்கும்.
கடந்த மாதம் 21-ம் தேதி இரண்டாவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இதுவரை இல்லாத அளவில் 135 நாடுகளை சேர்ந்தவர்கள் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமைச் செயலகம் முன் திரண்டனர். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமான அறிவிப்பதற்கான தீர்மானத்தை ஐ.நா. கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பரில் ஏற்றுக்கொண்டது.