எல்லையில் சுவர்: ட்ரம்ப் ட்வீட் காரணமாக அமெரிக்கப் பயணத்தை ரத்து செய்தார் மெக்ஸிகோ அதிபர்

எல்லையில் சுவர்: ட்ரம்ப் ட்வீட் காரணமாக அமெரிக்கப் பயணத்தை ரத்து செய்தார் மெக்ஸிகோ அதிபர்
Updated on
1 min read

அமெரிக்க - மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்புவது தொடர்பாக ட்ரம்ப் பதிவிட்ட ட்வீட்டை தொடர்ந்து அமெரிக்கப் பயணத்தை ரத்து செய்வதாக மெக்ஸிகோ அதிபர் நீயடோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப், அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில் பிரம்மாண்ட சுவர் எழுப்பப்படும் என்று அறிவித்தார். இது தொடர்பான ஒப்பந்தங்களில் புதன்கிழமை ட்ரம்ப் கையெழுத்திட்டார்.

மேலும், மெக்ஸிகோ எல்லையில் சுவர் எழுப்புவதற்கான நடவடிக்கைகள் சில மாதங்களில் தொடங்கும். இதற்கான முழு செலவையும் மெக்ஸிகோ ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து மெக்ஸிகோ அதிபர் பெனா நீயடோ கூறியபோது, "அமெரிக்கா எழுப்பும் தடுப்புச் சுவரில் எனக்கு நம்பிக்கை இல்லை. எல்லையில் சுவர் எழுப்புவதற்கு நாங்கள் பணம் அளிக்க மாட்டோம். அமெரிக்காவில் வசிக்கும் மெக்ஸிகோ மக்களின் நலனைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சுவர் எழுப்பும் அமெரிக்காவின் முடிவை நிராக்கரிகிறேன்" என்று கூறினார்.

இதற்கு ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்த ட்ரம்ப், "எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்ப மெக்ஸிகோ, பணம் தரவில்லை என்றால் அமெரிக்கப் பயணத்தை மெக்ஸிகோ அதிபர் நீயடோ ரத்து செய்ய வேண்டும்" என்று பதிவிட்டார்.

இதனைத் தொடர்ந்து நீயடோ தனது ட்விட்டர் பக்கத்தில், அமெரிக்காவில் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த கூட்டத்தில் நான் கலந்து கொள்ள போவதில்லை என்பது வெள்ளை மாளிகைக்கு தெரிவிக்கப்பட்டது" என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா - மெக்ஸிகோ எல்லை தடுப்புச் சுவர் விவகாரம் இரு நாடுகளின் உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியிருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in